புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி மஇகாவுக்கு மீண்டும் கிடைக்குமா?

நாட்டில் விரைவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றி இப்போதே சிந்திக்கத் தொடங்கிவிட்டன.

அந்த வகையில் கெடாவிலுள்ள புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி இந்த முறை மஇகாவுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி தலைதூக்கியுள்ளது. ஒரு காலத்தில் புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி மஇகாவின் கோட்டையாக இருந்தது. கெடா மஇகா தலைவராக இருந்த டத்தோ சரவணன், மூன்று முறை நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அந்தப் பதினைந்து ஆண்டு காலகட்டத்தில் அந்தத் தொகுதி தேசிய முன்னணி வசமே இருந்தது. டத்தோ சரவணன் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கிராமங்கள் நல்ல வளர்ச்சி கண்டன.

அவரை அடுத்து கெடா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் லுனாஸ் தொகுதியில் வெற்றிபெற்று கோலக்கெட்டில் நகரின் மத்தியில் கம்பீரமாக மஇகா கட்டடத்தை எழுப்பினார்.

டத்தோ சரவணனுக்குப் பிறகு புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முனைவர் கிருஷ்ணன், சுயேட்சை வேட்பாளர் வி. ஆறுமுகத்திடம் தோல்வி கண்டார். அரசியல் சுனாமியே இத்தோல்விக்குக் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தலில் கெடா மஇகா துணைத்தலைவர் எம்.எல். மாறன், புக்கிட் செலம்பாவ் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்விகண்டார்.

இந்தத் தோல்விக்கும் அரசியல் சுனாமிதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. மாறனுக்கு முன்பாக அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் எஸ். கணேசனும் தோல்விகண்டார்.

பின்னர் டத்தோ ஜஸ்பால் அங்கு போட்டியிட நிறுத்தப்பட்டார். அவரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இந்த தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்ட ஆறுமுகம், டத்தோ மணிகுமார், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, சண்முகம் ஆகியோர் இந்தத் தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர்.

மஇகா புக்கிட் செலம்பாவ் தொகுதியில் தொடர்ச்சியாகத் தோல்விகண்டதால் அம்னோவும் பெர்சத்து கட்சியும் அந்தத் தொகுதிக்குக் குறிவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்த விஷயத்தில் மஇகா உறுதியாக இருந்து அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்காமல்

அதைக் கைப்பற்றுவதற்கு இப்போதே முனைப்புக்காட்ட வேண்டும் என்று மாநில மஇகா உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here