முதலிடத்துக்கு முன்னேறியது, ரியல் மாட்ரிட்

20 கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் கிளப், ரியல் சோசிடாட் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் அபாரமாக கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 9-வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் (68 கோல்கள்) அடித்த பின்கள வீரர் என்ற பெருமையை செர்ஜியோ ரேமோஸ் தனதாக்கினார். இதற்கு முன்பு பார்சிலோனா கிளப் அணியை சேர்ந்த ரொனால்ட் கீமான் பின்கள வீரராக விளையாடி 67 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

70-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-வது கோலை அடித்தது. அந்த அணியின் கரிம் பென்ஜிமா இந்த கோலை அடித்தார். ஆனால் பந்து அவரது கையில்பட்டு போனதாகவும், அது கோல் இல்லை என்று எதிரணியினர் நடுவரிடம் முறையிட்டனர். இதனை அடுத்து வீடியோவை ஆய்வு செய்த நடுவர் கோல் தான் என்று அறிவித்தார். பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 17-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 83-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் மிகெல் மெரினோ இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பால் தடைப்பட்டு போட்டி தொடங்கிய பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் ரியல் சோசிடாட் அணிக்கு பாதகமாக ‘ஆப்சைடு’ உள்பட சில முடிவுகளை நடுவர்கள் அளித்ததாக அந்த அணியினர் குற்றம் சாட்டினார்கள்.

30-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 30 ஆட்டத்தில் ஆடி 20 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. இரு அணிகளும் சமபுள்ளிகள் பெற்றாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் அளித்த பேட்டியில், ‘நாங்கள் களத்தில் எதுவும் செய்யாதது போல் நடுவர்கள் முடிவு குறித்து மட்டுமே பேசுவது வருத்தம் அளிக்கிறது. மக்கள் சொல்வதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். இது தகுதியான வெற்றியாகும். எங்களுக்கு கொடுத்த பெனால்டி வாய்ப்பு முடிவு நியாயமானது. அதுபோல் பென்ஜிமா அடித்த கோலும் சரியானது. முடிவுகள் அளிப்பது நடுவர்களின் பணியாகும். நான் போட்டி குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். மற்ற விஷயங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. நாங்கள் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here