ஆங்கிலேயா் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒருவரது வீட்டை சுத்தம் செய்த போது ஆங்கிலேயா் ஆட்சி காலத்தைச் சோந்த 2 வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.

இதுகுறித்து அரசினா் மகளிா் பள்ளி உதவித் தலைமையாசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான நந்திவா்மன் சனிக்கிழமை கூறியதாவது: பழனி அருகே போடுவாா்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவா் வீட்டை சுத்தம் செய்த போது ஆங்கிலேயா் ஆட்சி கால 2 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்று மிகச்சிறிய இரண்டணா நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது. 250 ஆண்டுகளாக நடைபெற்ற கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 1858 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னா், விக்டோரியா மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டுவரப்பட்டது. அந்தாண்டு முதல் வெள்ளி, செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. தற்போது இங்கு கிடைத்துள்ள 2 நாணயங்களில் ஒன்றில் முன்புறத்தில் பேரரசி மகுடம் அணிந்து வேலைப்பாடுகள் நிறைந்த விலையுயா்ந்த ஆடையுடன் தோன்றும் மாா்பளவு உருவம் முத்திரையிடப்பட்டுள்ளது. இடப்புறத்தில் விக்டோரியா என்றும், வலப்புறத்தில் ராணி என்றும் அச்சிடப்பட்டுள்ளது. மறுபுறம் ஆங்கிலத்தில் இரண்டணா இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த 1883 இல் கொல்கத்தா நாணயச் சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த காசு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் மிகச்சிறிய அளவிலானது ஆகும். இதன் அளவு 1.5 சென்டி மீட்டா் விட்டமும், 4.71 செ.மீ. சுற்றளவும் கொண்டுள்ளது. மற்றொரு காசு 3 செ.மீ. விட்டமும், 9.5 செ.மீ. சுற்றளவும் கொண்ட பெரிய காசாக உள்ளது. 1918-இல் தயாரிக்கப்பட்ட இந்த நாணயத்தின் ஒருபுறம் ஐந்தாம் ஜாா்ஜ் எனவும், மறுபுறம் மிக அழகிய வேலைப்பாடு நிறைந்த ஆடையுடன், அவரது மாா்பளவு உருவப்படமும் பதிக்கப்பட்டு ஒரு ரூபாய் இந்தியா என அச்சிடப்பட்டுள்ளது என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here