பிகேஆர் கட்சியிலிருந்து ஐவர் நீக்கம்

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலிக்கு ஆதரவளிக்கும் ஐவரை கட்சியிலிருந்து நீக்கியதாக அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுதிப்படுத்தியது.

செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹார்டின், சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி இப்ராஹிம், மகளிர் அணி தலைவி ஹனிஸா தல்ஹா, பினாங்கு பிகேஆர் மகளிர் தலைவி நூர் ஸரினா ஸாக்காரியா, சபா மகளிர் தலைவி ரஹிமா மஜிட் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் அகமட் கசிம் தெரிவித்தார்.

இவர்கள் ஐவரையும் நீக்கும் பரிந்துரையை ஒழுங்கு நடவடிக்கை குழு மத்திய செயலவைக்கு கொண்டுச் சென்றது. அக்கூட்டத்தில் அவர்களை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

அஸ்மின் அலியின் ஆதரவாளர்களாக கட்சியில் ஊடுறுவும் உறுப்பினர்கள் அடையாளம் காணப் பட்டு வருகின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமானவர்களில் அஸ்மின் அலியும் ஒருவர். அஸ்மினுடன் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் பெர்சத்து, அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் குடையின் கீழ் ஆட்சியை பிடித்தனர்.

இதனிடையே கட்சியின் உதவி தலைவர் தியான் சுவா, மாச்சாப் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஜின்னி லிம், பினாங்கு மகளிர் அணியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவி கரோலின் கோர் ஆகியோருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு கடந்த மார்ச் 30ஆம் தேதி பிகேஆர் தலைமையகத்தின் முன் தியான் சுவாவை தாக்கிய நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் அந்நபரை கட்சியை விட்டு நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here