டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல் – டத்தோ ராமா உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் ரெங்கநாதன் கடத்தல் தொடர்பில் 50 வயது டத்தோ ராமசந்திரன் கந்தசாமி உட்பட மொத்தம் அறுவர் மீது பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.

அஸாரி ஷாரோம் (வயது 56) வங்காளதேச பிரஜை காசி நஸ்ரூல் (வயது 42) முகமட் துரை அப்துல்லா (வயது 52)
ஷெய்க் இஸ்மாயில் ஷெய்க் ஹாசான் (வயது 26) தம்பி என்ற விக்னேஸ்வரர் நாகேந்திரன் (வயது 28) ஆகியோர் மற்ற ஐவர் ஆவர்.

ஒரு வெள்ளை வேனில் காலை 9.40 மணியளவில் இவர்கள் அனைவரும் பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட போது 30க்கும் அதிகமான செய்தியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் மஜிஸ்திரேட் முகமட் இக்வான் முகமட் நாசிர் முன்னிலையில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. இருப்பினும் குற்றப் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் டத்தோ ராமசந்திரன் மற்ற ஐவருடன் சேர்ந்து பாண்டார் ஸ்ரீ டாமான்சாராவிலுள்ள ஒரு உடற்பயிற்சி மைதானத்தில் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தை கடத்தினர் என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.

5 கோடி சிங்கப்பூர் டாலர் பிணைப் பணம் கோரும் நோக்கத்தில் இவர்கள் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தை கடத்தியிருக்கின்றனர்.

டத்தோ ராமா குற்றவியல் சட்டம் பிரிவு 109 மற்றும் 1961 கடத்தல் சட்டம் பிரிவு 3 கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

டிபிபி ஹக்கிம் அமீர் அப்துல் ஹமிட் அரசு தரப்பு வழக்கை நடத்த டத்தோ ராமா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சிவராஜ் ஆஜரானார். மற்ற ஐவர் தரப்பில் வழக்கறிஞர் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

மரணமுற்ற டத்தோஸ்ரீ ஆறுமுகம் குடும்பத்தாரின் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சன்ட் கவனிக்கிறார்.

ஜாமீன் மறுக்கப்பட்டது. இருப்பினும் உயர் ரத்த கொண்ட டத்தோ ராமாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதற்கு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

வரும் ஆகஸ்டு 27ஆம் தேதி இவ்வழக்கு நிர்வாகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here