நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாளில் உயிரிழந்த எட்டு ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஐந்து ரசிகர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்கள்.

ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தனது 49-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காகப் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

எனினும் பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் காரணமாக எட்டு ரசிகர்களின் உயிர் பறிபோயிருக்கிறது.

ஆந்திராவின் சித்தூரில் நேற்றிரவு பவன் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தார்கள். மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்தில் பலியான மூவருக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார் பவன் கல்யாண்.

இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த ஆறு மணி நேரத்தில் மற்றொரு துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் பவன் கல்யாணின் பிறந்த நாளைக் கொண்டாடிய ஐந்து ரசிகர்கள், வீட்டுக்குத் திரும்பியபோது அவர்கள் பயணம் செய்த கார், டிரக்கில் மோதியது. இச்சம்பவத்தில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here