ராகு – கேது பரிகாரத் தளங்கள்

திருப்பாம்புரம்

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.

ஸ்ரீகாளஹஸ்தி

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற தலங்களில் ஒன்று ஸ்ரீகாளஹஸ்தி. இது வாயுத் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும்.

திருக்களாச்சேரி

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்தால், ராகு- கேது தோஷம் விலகும்.
சென்னை ஸ்ரீகோலவிழி அம்மன்

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும்.

காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன் அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம். இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன

திருமுருகன்பூண்டி

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் – திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here