அடுத்த ஆண்டில் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்

கொரோனா தொற்று நோய் பேரிடர் காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:

கொரோன தொற்று நோய், இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சுருக்கத்தின் தீவிரத்தைப் பொருத்து, அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் 1.4 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும்.

அந்த வகையில், ஏற்கெனவே அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் மேலும் பல லட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நடுத்தர வருவாய் கொண்ட பல நாடுகளில் கணிசமான மக்கள் அதிக வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் அபாயம் உள்ளது. அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோரில் 82 சதவீதம் பேர், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

எனவே, வளர்ச்சி, வறுமைக் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிரான இந்த கடுமையான பின்னடைவை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக மூலதனம், தொழிலாளர்கள், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனாவுக்குப் பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும்.

இந்தியாவில் மும்பை நகரின் தாராவி பகுதியில் அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்களின் பயனுள்ள அணுகுமுறை மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக அப்பகுதியில் கொரோனா தொற்று பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டது. அப்பகுதியில் கடந்த மே மாதத்தில் அதிகபட்ச பாதிப்பு இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் அதாவது 3 மாதங்களில் பாதிப்பு 20 சதவீதமாகக் குறைந்தது. ஈடுபாடு மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த பலன் அது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவியது கொரோனா தொற்று. உலக அளவில் 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்த் தொற்று பாதிப்பால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா தீநுண்மி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2 லட்சத்து 10,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here