நவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி!

கவுரம் என்ற சொல்லுக்கு, வெண்மை நிறம் என்று பொருள். அம்பிகை இயல்பாக பச்சை நிறத்தவளானதால், சியாமளா என்றே பெயர் பெற்றிருக்கிறாள். வெண்மை உடன், கரிய நிறத்தைக் கலந்தால், பச்சை நிறமாக மாறும். கரிய நிறம் காளியினுடையது; வெண்மை உமையம்மையினுடையது. இரண்டு சக்திகளும் இணைந்த வடிவமே, ஜகன்மாதாவின் பச்சை நிறம். நாராயணனின் சகோதரியும் அவர் நிறமாகத் தானே இருப்பாள்!சும்பன், நிசும்பன் எனும் இரு கொடிய அரக்க சகோதரர்கள் தோன்றி, மகிஷனைப் போலவே மூவுலகையும் வென்று, எல்லாரையும் துன்பப்படுத்தி, கொடுமையான அசுர ஆட்சி புரிந்தனர். அவர்களை அழித்து, மூவுலகையும் காக்க எண்ணிய தேவி, அதற்கான சக்தி பெற, சிவபெருமானை நோக்கி விரதம் இருந்த நாட்களே, நவராத்திரி நாட்களாகும். உலகைக் காக்க விரதம் இருந்த அன்னைக்கு, சர்வ வல்லமையையும் அளித்தார் சிவன். அதே சமயம் சும்ப, நிசும்பர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் ஒன்றுகூடி, இமயமலையில் உள்ள மானசரோவர் எனும் புனித நீர்க்கரையில், அம்பிகையைக் குறித்து, வழிபாடுகளும், யாகங்களும் நிகழ்த்தினர். அவர்களது பக்தியை மெச்சிய தேவி, தேவர்கள் முன் பிரசன்னமாகி, ‘என்ன வேண்டும்; எதற்காக இந்த வழிபாடு?’ என, வினவினாள். அப்போது, பச்சை நிறத்தவளான உமாதேவியின் உடலிலிருந்து, வெண்மை நிறமான, ஸ்ரீ மஹா கவுரி எனும் சக்தியானவள் வெளிப்பட்டு, ‘சும்ப, நிசும்பர்களை அழிக்க வேண்டி, தேவர்களால் என்னைக் குறித்து செய்யப்பட்ட யாகம் இது…’ எனக் கூறினாள்.

வெண்மை நிறத்தவளாய் சிவப்புப் பட்டாடை உடுத்தி, சகல ஆபரணங்களும் தரித்து, மங்களத் திலகமும், பூக்கள் அலங்கரித்த கருங்கூந்தலுமாக, வர்ணனைக்கு எட்டாத அழகும், ஒளியும் பொருந்திய ஸ்ரீ மஹா கவுரியானவள், தேவர்களைப் பார்த்து, ‘இனி கவலை வேண்டாம்; அரக்கர்களை அழித்து, மூவுலகிற்கும் அருள்புரிவோம்…’ என, வரமளித்தாள். தேவர்கள் ஆனந்தப்பட்டு, அப்போதே, ‘ஜய ஜய…’ என, கோஷம் எழுப்பினர். வெண்மை நிறம் வெளிப்பட்டதால், உமையவளின் தோற்றம், கரிய நிறத்தில் மாறி, அசுர குலத்தை அழிக்கும் காளியாக உருவெடுத்தது. இப்படி, இங்கு நிகழ்ந்து கொண்டிருக்க, அரக்கர்களைச் சேர்ந்த சுண்டன், முண்டன் எனும் இருவர், ஸ்ரீ மஹா கவுரியின் அற்புத அழகைக் கண்டு வியந்து, அவளை சாதாரணப் பெண்ணாக எண்ணி, ‘இவளே நம் அரசர்களுக்கு மனைவியாகத் தகுதியுடையவள்’ என்றுமுடிவெடுத்தனர்.சும்ப, நிசும்பர்களின் இருப்பிடம் சென்று, ‘ஏ அரசர் பெருமான்களே…

இன்று இமயமலையின் மானசரோவரில் ஒரு பெண்ணைக் கண்டோம். ஈரேழு உலகில் தேடினாலும், அவளுக்கு ஒப்பான அழகுடையோர் கிடையாது. எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்றிருக்கும் தாங்கள், அவளை மனைவியாகப் பெற்று இன்புற வேண்டும்…’ என, வேண்டினர். அறியாமையும், ஆணவமும் நிறைந்த அரக்கர்கள், சுக்ரீவன் என்பவனைத் துாது அனுப்பி, தங்களின் பிரபாவங்களைச் சொல்லச் சொல்லி, அந்தப் பெண்ணை அழைத்து வருமாறு உத்தரவிட்டனர்.துாது வந்தவனை, கருணையோடு நோக்கிய அம்பிகை, ‘ஏ துாதனே…

நீ சொல்வது முற்றிலும் உண்மை. மூவுலகையும் ஆளும் உங்கள் அரசர்களை மணம் புரிய, கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனாலும் என்ன செய்வது… இளம் வயதில் அறியாமல் ஒரு சபதம் எடுத்துள்ளேன்.

அதை மீற முடியவில்லையே…’ என்றாள். ‘என்ன சபதம்…’ என்றான் துாதன். ‘என்னோடு போர் செய்து, என்னை எவர் வெற்றி கொள்கிறாரோ, அவரே என் கணவராவார்…’ என்றாள் அம்பிகை.துாதன் சிரித்தபடியே, ‘பெண்ணே… நீ அறியாமல் பேசுகிறாய்.

எங்கள் அரசர்களின் சுயபலத்தையும், படைப்பலத்தையும் நீ அறியவில்லை. எனவே, சபதத்தை விட்டு, என்னுடன் வந்து மன்னர்களை மணம் செய்து, சந்தோஷமாயிரு…’ என்கிறான். அம்பிகையும், ‘இது சாத்தியமில்லை; என்னை வென்று திருமணம் செய்துகொள்ளச் சொல்…’ எனக் கூறி விடுகிறாள். துாதன் திரும்பியதும், ஒரு பெண் தங்களைப் போருக்கு அழைத்த விஷயம், அவர்களுக்கு மிக அவமானமாகப் போனது.

அது, அவர்களின் கோபத்தையும் துாண்டியது. போரைத் துவக்கினர். இதைத் தானே எதிர்பார்த்துக் காத்திருந்தாள், அம்பிகை!துாம்ரலோசனன் என்பவன் தலைமையில், முதலில் படை கிளம்பியது; அவர்களை காளி எதிர் கொண்டு, ‘ஹூம்…’ என, பயங்கரமாக சப்தமிட்டாள்; அந்தப் படையேசாம்பலாகி விட்டது. அடுத்து, சண்டன், முண்டன் தலைமையில் பெரும்படை புறப்பட்டது.

காளியே எதிர்கொண்டு அவர்களை அழித்து, சண்டனின் தலையையும், முண்டனின் உடலையும், ஸ்ரீ மஹா கவுரியின் திருவடியில் போட்டு, ‘இந்த யுத்த வேள்வியில் சும்பனையும், நிசும்பனையும் அழித்து அருள்புரிவாயாக…’என, வேண்டினாள். கவுரியும், காளியை நோக்கி, ‘சண்டனையும், முண்டனையும் அழித்ததால், இனி நீ சாமுண்டா என்றே அழைக்கப்படுவாயாக…’ எனக் கூறினாள். அரக்கர் படை செய்வதறியாது திகைத்து, ரக்தபீஜன் என்ற கொடிய அரக்கன் தலைமையில், வலிமையான வீரர்கள் அடங்கிய படையை அனுப்பினான். ரக்தபீஜனின் சிறப்பு என்னவெனில், அவன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், ஒவ்வொரு ரக்தபீஜனாக உருவெடுக்கும் சக்தி பெற்றவன்; அவனை அழிப்பது சுலபமாயில்லை.கவுரியானவள், காளியை அழைத்து, ‘நான் இவனோடு போரிடுகையில், கீழே சிந்தும் ரத்தத்தைப் பருகி விடு; கடைசியில், ரத்தமில்லாதவனாக செய்து அழிப்போம்…’ எனக்கூற, அவ்வாறே அவனையும் அழிக்கின்றனர்.எல்லாப் படையும் அழிந்த நிலையில், நிசும்பன் போருக்கு வர, கடும் போர் நிகழ்கிறது.

மகிஷனைப் போல் இவனுக்கும் மீண்டும் மீண்டும் தலைமுளைக்கிறது. அரக்கனின் உடலை கவுரி வெட்ட, முளைக்கும் தலையை, சாமுண்டா பிளக்க, அவன் மாள்கிறான். இறுதியாக, சும்பனே யுத்தத்திற்கு வருகிறான். அவனைப் பார்த்ததுமே, அன்னையின் கோபம் எல்லை மீறுகிறது.

துராத்மாவான அவனை அழிக்க, சிங்கத்தின் மீதேறி பாய்ந்தாள்; யானையின் மீதேறி சும்பன் போரிடுகிறான். அம்பிகையின் காட்டுத் தீயை ஒத்த வேகம் தாங்காமல், யானை மடிந்து, அவனும் கீழே விழுகிறான். மீண்டும் எட்டு கைகளும், பயங்கர ஆயுதங்களும் கொண்டு போரிடுகிறான். அவனோடு கடுமையாகப் போரிட்டு, வாளை அவன் நெஞ்சில்பாய்ச்சினாள்; காளியும் சூலத்தால் அவனை வதைக்கிறாள்.

சும்பன் மடிகிறான். ஒரு தீய சக்தி முற்றிலுமாக அழிக்கப்பட்டதால், வானம் நிர்மலமாயிற்று. சூரியன் முன்னை விட பிரகாசித்தான்; ஆறுகளில் குளிர்ந்த நீர் பெருகி ஓடியது; தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்; கந்தர்வர்கள் கானம் பாடினர்; எங்கும் சுபிட்சம் நிலவ காளியும், கவுரியும் இணைந்து, சாந்த சொரூபமாக, சர்வ நாராயணீ சக்தியாக, உமாதேவியானவள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் வேண்டிய வரம் அளித்தனர். எல்லாரையும் பார்த்தபடி, ‘மூவுலகிற்கும் பயன் தருமாறு வரம் கேளுங்கள்…’ என்றாள் தேவி.

‘நல்லவர்கள், பெண்கள், பசுக்கள் எல்லாரும் பயமின்றி வாழ வேண்டும். தர்மத்திற்கு இடையூறு விளைவிக்கும் அதர்ம சக்திகள் தோன்றும்போதெல்லாம், நீ அவதரித்து, அவற்றை அழித்து, எங்களைக் காப்பாற்று! காலத்தில் மழை பெய்து வளம் சுரக்க அருள்வாய். மேலும், நல்லாட்சி நடந்து, எங்கும் தர்மம் நிலைத்திட அருள்வாயாக…’ எனஅனைவரும் வேண்டினர்.

ஸ்ரீ மஹா கவுரியும், ‘அவ்வாறே ஆகட்டும்…’என, வரமளித்து மறைந்தாள். இக்கதையைப் படிப்போருக்கும், கேட்போருக்கும் அன்னை வேண்டிய வரங்களை வழங்குவதுடன், நாடு நலம் பெறும்; பொது நலமும் கிட்டும்.–ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார்மயிலாடுதுறைபூஜை நேரம் மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை துக்கம் நீக்கும் துர்கை வழிபாடு பூஜிக்கும் முறைதாம்பாளத்தில், ஒன்பது இதழ் தாமரைக் கோலமிட்டு, நடுவில் திரு விளக்கேற்றியும், இதழ்களில் ஒன்பது தீபமேற்றியும், பூக்களால் அலங்கரித்து, மேற்படி சுலோகம் சொல்லி, ‘ஓம் ஸ்ரீமஹாகவுர்யை நமஹ…’ என, அர்ச்சனை செய்ய வேண்டும்.நிவேதனம்உளுந்து வடை, பாசிப்பருப்பு சுண்டல்.பெண்களுக்குசுமங்கலிகளுக்கு மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, தீபத்திற்கு ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்யவும்.நான்காவது நாள் சுலோகம்அம்பிகாம் சிவவாமஸ்தாம் ஸர்வாபீஷ்ட வரப்ரதாம் |சூலபாசதராம் தேவீம் மஹாகௌரீம் நமாம்யஹம்||- ஸ்ரீ அம்பிகா ஸ்துதிமஞ்சரி.பொருள்தவமிருந்து சிவபெருமான் இடப்பாகம் பெற்ற தேவதேவியே! வணங்குபவர்களின் விருப்பங்களை அருளுபவளே! சூலம், பாசக்கயிறு ஏந்தி தீய சக்திகளை அழிப்பவளே!

மஹா கவுரி எனும் திருநாமம் உடைய உன்னை நமஸ்கரிக்கிறேன்.நவராத்திரி நான்காம் நாளுக்கான நிவேதனம்நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன்வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.உளுந்து வடைதேவையான பொருட்கள்உளுந்து – 250 கிராம்மிளகு – 10 கிராம்சீரகம் – 20 கிராம்பச்சை மிளகாய் – 1பெருங்காயம் – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை – 2 ஈர்க்குஎண்ணெய் – வடை பொரிக்க தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறைஉளுந்தை இரண்டு முறை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிக தண்ணீர் சேர்க்காமல், கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின், மிளகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். வடை சுடுவதற்கான எண்ணெயை, வாணலியில் சூடாக்கவும். வடைகளை தட்டி, நடுவில் சிறிய துளை செய்து, ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும். தங்க நிறத்தில், ‘மொறு மொறு’வென வெந்த பின், வடைகளை எடுக்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 3,167; கார்போஹைட்ரேட், 139.9; புரதம், 62.6; கொழுப்பு, 258.3.பாசிப்பருப்பு சுண்டல்!தேவையான பொருட்கள்பாசிப்பருப்பு – 500 கிராம்எண்ணெய் – 10 மில்லிகடுகு – 1 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டிகருவேப்பிலை – 2 ஈர்க்குகாய்ந்த மிளகாய் – 2பச்சை மிளகாய் – 2துருவிய இஞ்சி – 10 கிராம்பெருங்காயம் – 2 தேக்கரண்டிஉப்பு – தேவைக்கேற்பதுருவிய கேரட் – 10 கிராம்துருவிய வெள்ளரி – 10 கிராம்துருவிய தேங்காய் – 50 கிராம்செய்முறைபாசிப்பருப்பை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவியதேங்காய், துருவிய கேரட் மற்றும் வெள்ளரி சேர்த்து இறக்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2035.7; கார்போஹைட்ரேட், 281.7; புரதம், 126.1; கொழுப்பு, 40.5. இரண்டு நிவேதனங்களும், தலா ஐந்து பேர் சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here