
நம்மை, குறிப்பாக மலேசிய மக்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கோவிட்-19. இதைத்தடுப்பதற்கான் அசுர முயற்சிகளில் மலேசிய சுகாதாரத்துறை வெகு அக்கறையோடு பயணித்துகொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடமுடியாது.
இதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்கள், மருத்துவக்குழுவினர் நம் வணக்கத்திற்குரியவர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதே!
கோவிட்- 19 நிலைமைக்குப்பிறகு மலேசிய மக்களின் வாழ்க்கைமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இத மாற்றங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டவையல்ல. விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ண்டுதான் ஆகவேண்டும் என்றாகிவிட்டது. இதிலிருந்து விடுபடும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்பதுதான் உண்மை.
உலக மருத்துவம் அல்லது அனைத்துலக சுகாதார மையம் (WHO) இது குறித்து நிறைய விளக்கங்களைக் கூறியிருக்கிறது. வழிகாட்டிகளைக் குறிப்பிட்டிருக்கிறது. அவற்றை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதுபோலவே தங்களுக்கென சில மாற்று வழிமுறைகளை அந்தந்த நாடுகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் வெற்றி என்பதில் இன்னும் நிறைவுத்தன்மை ஏற்படவில்லை. கோவிட் ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கை குறைவாகவே இருக்கிறது.
பல மாதங்களுக்கு முன் கோவிட் -19 கட்டுக்குள் இருந்தது. ஆனால், நிலைமை மாறிவிட்டது. கோவிட் -19 தொற்று வெகுவாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றும் பலருக்குத்தெரியும். புரிந்தும் அது பொருட்டாக இல்லை. ஆனாலும் தலைக்குமேல் வெள்ளம் என்றபின் அதுபற்றி யோசிப்பதற்கு இப்போது போதிய அவகாசம் இல்லை.
கொரொனா தொற்று நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. அது, வெவ்வேறாய் புதிய பரிணாமத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. புதிய மாற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் குறைந்து மனித சக்திக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால் இதற்கான் தடுப்பு மருந்துகளைத்தான் நம்பவேண்டிய அவசரம் இப்போது உருவாகியிருக்கிறது.

தடுப்பு மருந்துகள் ஆற்றலைக்கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளும் எழாமலில்லை. எந்தச் செயலானாலும் எதிர்விளைவுகள் இல்லாமல் இருக்காது. தடுப்பு மருந்துகளிலும் அப்படித்தான் இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தடுப்பு மருந்துகளால் அசம்பாவிதங்கள் இல்லையென்றும் கூறுவதற்கில்லை என்றாலும் தடுப்பு மருந்துகளை நம்பித்தான் ஆக வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
இங்குதான் ஒரு சிக்கல் தலைதூக்கியிருக்கிறது. உலக அரங்கில் தடுப்பு மருந்துகளின் தேவை வெகுவாக அதிகரித்திருக்கின்ற இவ்வேளையில் போலிகளின் நடமாட்டம் தொடங்கியிருப்பதையும் அரசாங்கம் மிக உன்னிப்பாய்க் கவனிக்கவேண்டியிருக்கிறது.
போலி தடுப்பூசிகளால் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் . போலி தடுப்பூசிகள் மக்களுக்குத் தீங்காகவே அமையும். ஆதாயம் கருதி ,பல போலி தயாரிப்புகள் உற்பத்தியில் செயல்படலாம். இதைத்தடுக்க மிக நேர்மையான மனித ஆற்றல் தேவைப்படுகின்றன. இதில் தோல்வி கண்டால் மிக மோசமான பின்விளைவுளைச் சந்திக்க நேரிடும்.
இதைத்தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இப்போதே சுகாதாரத்துறை தயாராக வேண்டும். இதற்கு கூடுதல் ஆள்பலம் தேவைப்படும்.
இவற்றையெல்லாம் தாண்டி தரமான தடுப்பூசி போட்டுக்கொள்வதும் தடுப்பூசிகளில் வீரியம் எத்தனை காலம் என்பதும் கேள்வியாகவும் எழக்கூடும். அதற்கான கட்டணம் மக்களால் ஏற்கப்படக்கூடியதாக இருக்குமா? அரசு மருத்துவமனைகளில் சுலபமாக கிடைக்குமா? என்பதும் கேள்விகளாகத்தான் இருக்கின்றன.
தடுப்பூசி என்பதில் அதன் நகர்வு இன்னும் அட்டைபோலவெ இருக்கிறது. ஒருவேளை சரியானவற்றைத்தேர்வு செய்வதில் தாமதமாகலாம். ஆனாலும் சுகாதாரத்துறையின் மீது அபார நம்பிக்கை இருக்கிறது.
இதோடு மாற்றுத்தீர்வாக சில நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றலாம் . ஜப்பானில் கடுமையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கொரோனா இருக்கின்றவர்கள் பரிசோதனை செய்யாமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும். பார்கள், உணவகங்கள் மறு அறிவிப்புவரை குறிப்பிட்ட நேரத்தில் மூடப்படவேண்டும்.
வெளியில் நடமாடும்போது முகக்கவசம், சமூக இடைவெளி என சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தால் கோவிட் தொற்றை தூரத்தில் வைக்கலாம்.
முன்பெல்லாம் ஊருடன் கூடி வாழ் என்றுதான் கூறுவார்கள் . இப்போது தொற்றுடன் சேர்ந்து வாழ் என்றகிவிட்டது. ஆனாலும் கூடா நட்பைப்போல் தொற்றை நெருங்க விடாமலிருக்க, அலட்சியத்தைத் தூர வீசுவதுதான் சரியான வழியாக இருக்கும்.
.
– சிற்பியன்


















