அனைத்துலக சிறந்த மாணவியாக தமிழ்ப்பள்ளி மாணவி கீர்த்திகா தேர்வு

அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட தொடக்க நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சியாளர் அகாடமியின் 2020 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக அளவில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் மாணவியான கீர்த்திகா ராமலிங்கம்.

 60 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு இயங்கலை வழி நடத்தப்பட்ட இப்போட்டியில் தனது தனித்துவமான  பதில்களை வழங்கியதின் வழி இந்த மாபெரும் விருதை பெற்று, தான் படித்த தமிழ்ப்பள்ளிக்கும் தனது குடும்பத்திற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் இவர்.

இப்போட்டியில் பங்குகொண்ட கீர்த்திகா முதலில் அவரைப்பற்றிய காணொலி ஒன்றை ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதில் அவரின் படைப்பும் பேச்சாற்றலும் நிறைவாக இருந்ததால் இப்போட்டியில் இவர் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.  

வியட்னாம், நேப்பாள், கிரீஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் இயங்கலை வழி நடத்தப்பட்ட நேரடிச் சந்திப்பில் பொது அறிவு, உலக நடைமுறை, எதிர்கால ஆசை போன்ற கேள்விகளைக் கேட்டனர்.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆயுத்தமாக  நிறைய புத்தகங்கள் படிப்பது, செய்திகள் பார்ப்பது, இணையத்தில் பொது அறிவு அம்பந்தப்பட்ட விஷயங்களைத் தேடி தெரிந்து கொள்வது, கோவிட்-19 காலக்கட்டத்தில் உலக நாடுகள் எதிர்நோக்கிய சவால்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்றவற்றை எப்படி சமாளித்தார்கள் போன்ற ஆய்வுகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டதாக கீர்த்திகா குறிப்பிட்டார்.

  போட்டிகள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடபெற்றது.  நீதிபதிகள் சில நேரங்களில் பேசுவது புரியாமல் இருக்கும் இயங்கலை வழி நடத்தப்படுவதால் இணைய துண்டிப்பு, இடையூறுகள் போன்ற சிக்கல்கள்  ஏற்பட்டாலும் பெரிய சவாலுக்கு மத்தியில் சாதனைப் படைத்தது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

 இப்போட்டிக்கு முன்பாகவே பல அனைத்துலக போட்டிகளில் புத்தாக்கம், இளம் ஆய்வாளர்கள் போன்ற போட்டிகளில்  கலந்து கொண்டு  20 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதையும் இவர் சுட்டிக்காட்டினார். கீர்த்திகா 7 முறை  தேசிய , அனைத்துலக ரீதியில் சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.  

                                                                                     -பி.ஆர்.ஜெயசீலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here