செயற்கை செத்துப்போகும்- இயற்கை ஒத்துப்போகும்-

இன்று தாய்மொழிதினம்(21-2-2021)

அண்டை நாடுகளை அலை கடல் இணைத்திருக்கிறது. நீர்தான் உலகின் அதிக பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது என்பது பள்ளிப்பாடம். ஆனாலும் அந்த  கடல் நீருக்கு ஆணவமே இல்லை.

தரையை விழுங்கிவிடாமல் அதன் ஆதிக்கம் இருக்கிறது. இது இயற்கை. இயற்கையால் மனிதனுக்கு நன்மைகள் அதிகம். அதைத்தீண்டாத வரை. . மனிதன் வாழ்வதே இயற்கையால்தான். அதனால்தான் இயற்கையைத் தெய்வமாக வணங்குகின்றனர்.

மனித நாகரீகத்தோடு இயற்கையாய் உருவான மொழிகளும் அப்படித்தான். கடல்போல் ஆக்கிரமித்திருந்தாலும்  ஆதிக்கம் இல்லை. கரையோடு கடல் நீர் பேசும் மொழிக்கு அலை என்று பெயர். உலகின் மூத்த மொழியும் இதுதான். இதை மறந்துவிட்டு தம் மொழியே உயர்ந்த மொழி என்றும் பிதற்றுகிறான்.

செயற்கை செத்துப்போகும்- இயற்கை ஒத்துப்போகும் என்பதுதான் இன்றைய பொன்மொழி. அதனால் இயற்கையை சீண்டாமல் இருப்பதே அறிவுடையார் செயலாகும். பிற மொழிகளைச் சீண்டாமல் , கற்றுத்தேர்வதும் அறிவுடைச்செயலே!

அவரவர் மொழி அவரவருகுத் தாய்மொழி. இதில் எந்த தாய் உயர்வு என்பதல்ல. தாய்மையில் பேதம் இல்லை. புல்லாங்குழலுக்கு மொழி தெரியாது. அதைல் நுழையும் காற்றை மட்டுமே சுவாசித்து இசையயாக்குகிறது. அதுதான் தாய்மையின் பணி.

நாட்டுக்கு நாடு வேறுபட்ட மனிதன் அடிப்படையில் மனித இனம்தான். அதில் மாறுபாடு இல்லை. சீதோஷ்ணத்தால் மட்டுமே நிறம்  மாற்றமடைந்திருக்கிறது. மற்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

சைகைளிலிருந்து பேச்சுக்கு மாறிய மனிதன், மொழியை உருவாக்கினான். அந்த மொழியால் தொடர்புகளை எளிமையாக்கினான். பேசும் வார்த்தையைப் புரிந்துகொள்ள எழுத்தை உருவாக்கினான். அந்த எழுத்துகள் வார்த்தைகளாக மாறி மொழியாகி விட்டன.

இன்று, மொழிகளின் ஆதிக்கம்  மிக உச்சத்தில் இருக்கின்றன. மொழிகளால்தான் உலக இயக்கம் தடையின்றி நிகழ்கிறது. மொழிகளால்தான் மனித நாகரீகம் உயர்ந்துகொண்டே போகிறது.

ஆடையில்லாதவன்  அரைமனிதன். மொழி உள்ளவனே  முழு மனிதன் என்பதாகிவிட்டது. அந்த மொழி கல்வி எனும் பெரிய கப்பல்களால் கரை சேர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மொழி என்ற நிலையில் ஆயிரக்கணக்கில் மொழிகள் தோன்றியிருக்கின்றன. பல ஆயிரம் மொழிகள் அழிந்தும் போயிருக்கின்றன. பல ஆயிரம் மொழிகள் பேச்சோடு முடிந்தவையாக இருக்கின்றன, 

இன்னும் பல மொழிகள் குறிப்பிட்ட எல்லையைதாண்டமுடியாமல் வட்டார  வழக்கு  மொழிகளாகவே முடங்கியும் கிடைக்கின்றன. தொன்மை மொழிகலுக்கு ஒரு சிறப்புண்டு. அத்தொன்மையால் ஆதியை அறிய முடியும். அவற்றுகென்று சில மொழிகள் இருக்கின்றன. அவற்றில் தமிழ் தாயாய் இருக்கிறது.  இது மமதை இல்லை. மதுப்புரை. 

இவற்றையெல்லாம் தாண்டி இமய மொழிகளாக விரல் எண்ணிக்கையில் இருக்கும் மொழிகளால்தான் இன்றைய உலக இயக்கம் சுழன்றுகொண்டிருக்கின்றன.

மொழியில்லாமல் மனிதம் இல்லை. மனிதன் என்றால் மொழி வேண்டும். அந்த மொழிதான் அவனை யாரென்று  முதன்மைப்படுத்துகிறது.  மொழி அழிவதும் அழியாமல் காப்பதும்  மனிதனால் மட்டுமே முடிந்த, முதிர்ந்த செயலாகும். 

அழிந்துவரும் பட்டியலில் தங்கள் மொழியும் இடம் பெற்றுவிடக்கூடாது என்ற சிந்தனை இப்போது வேரூன்றியிருக்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது வங்காளமொழி. இம்மொழி உருவாவதற்கும் தாய் மொழி என்ற ஒன்று இருந்திருக்கிறது. அந்தத் தாய்வயிற்றுப்பிள்ளையாக உருவான வங்காள மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று மாணவர்கள் நடத்திய போராட்ட விளைவுதான் இன்றைய தாய்மொழி தினமாக உருவெடுத்திருக்கிறது.

உலக ஐக்கிய நாடுகளின் கலை, கல்வி, பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு 1999 இல் தாய்மொழி தினத்தை அங்கீகரித்து 2000 த்தாம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது. 

மொழிதான் மனிதனை அடையாளப்படுத்துகிறது . மொழிதான் பண்பாட்டை நிலை நிறுத்துகிறது. மொழிதான் கலை கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. மொழியில்லாதவன் உயிரற்றவனுக்குச் சமம் என்கின்றனர். உயிரோடு நடமாட தாய்மொழிதான் உயிர்பிச்சை அளிக்கிறது. அது எந்த மொழியாகவும் இருக்கலாம்.

தன்னைப் பெற்றவளை எவரேனும் உதாசீனம் செய்வார்களா? இன்று உலக தாய்மொழி தினம் . தமிழே நமக்குத் தாய் . வணங்குவோம் , வாழ்த்துவோம், போற்றிப்பாடுவோமே!

எழுத்து: கா.இளமணி

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here