கிரேப் கார்களில் பயணிகள் போர்வையில் ஸ்கேம் மோசடிக் கும்பல்

 

கோலாலம்பூர்-

கிரேப் காரில் பயணம்  செய்யும் கும்பல் ஒன்று ஓட்டுநர்களின் கைப்பேசிகளை அபகரித்துக் கொண்டு ஸ்கேம் மோசடிகளில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பயணிகள்போல் கிரேப் கார்களில் ஏறும் ஆடவர் கும்பல் ஒன்று முதலில் அந்தக் காரில் பயணிப்பதற்கு முன்னர் கைப்பேசியில் பதிவு செய்து கொள்கின்றனர்.

அதன் பின்னர் அவர்கள் காரில் ஏறியதும் ஓட்டுநரிடம் நல்ல முறையில் பேச்சுக் கொடுக்கின்றனர். திடீரென்று அவர்கள் தங்கள் கைப்பேசியை வீட்டில் வைத்து விட்டதாகத் தந்திரமாகப் பேசுகின்றனர்.

இவர்களின் பேச்சை நம்பி ஓட்டுநர்களும் தங்களிடம் இருக்கும் கைப்பேசியை அந்த மோசடிக்காரர்களிடம் தருகின்றனர் என்று கோப்பராசி இஹெய்லிங் மாஜு நிறுவனத்தின் தலைவரும் ஓட்டுநருமான திருநாவுக்கரசு அன்பழகன் கூறினார்.

 

எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அண்மையில் சில ஓட்டுநர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து எங்களிடமும் போலீஸ் நிலையத்திலும் புகார் கூறியுள்ளனர்.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்றார் அவர்.

ஓட்டுநர்களின் கைப்பேசியை வாங்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தாரிடம் பேசுவதுபோல் பேசி அந்தக் காரிலேயே வீட்டிற்குச் சென்று ஓட்டுநரைக் கொஞ்சநேரம் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு, பின்னர் வீட்டிற்குச் சென்று கைப்பேசியை எடுத்து வருவதாகக் கூறுகின்றனர்.

அதன் பிறகு ஓட்டுநரின் கைப்பேசியில் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து சுதாட்டம் விளையாடுவதற்காக 300 வெள்ளி முதல் 500 வெள்ளி வரை கைப்பேசிக் கட்டணத்தில் நாங்கள் வரவு வைத்துள்ளதாக அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனம் அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புகிறது.

சுதாட்டமே ஆடாதபோது எப்படி தங்கள் கைப்பேசி எண்ணுக்கு கட்டணம் வருகிறது என்று சில ஓட்டுநர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பயணிகள்போல் வருகின்ற அந்தக் கும்பல், ஓட்டுநரின் கைப்பேசியைப் பயன்படுத்தி அதன் மூலம் கள்ள சுதாட்டம் அதுவும் ஸ்கேம் மோங்டியில் ஈடுபட்டு வருவது வெளிச்ங்த்திற்கு வந்துள்ளதாக திருநாவுக்கரசு கூறினார்.

இந்தச் சங்கத்தின் பொருளாளரும் ஓட்டுநருமான மணிமாறன் மாணிக்கம் கூறுகையில், கிரேப் ஓட்டுநர்கள் மட்டுமல்ல மற்றவர்களிடம் கைப்பேசியைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நம்முடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி அந்தக் கைப்பேசியின் மூலம் மற்றவர்கள் சுதாட்டம் ஆடி வருகின்றனர். 300 வெள்ளி தொடங்கி அதற்கும் கூடுதலான ரொக்கம் வரை இந்தக் கும்பல் கைப்பேசிகளைப் பயன்படுத்தி சுதாட்டம் ஆடி வருகின்றது.

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து வருகின்ற குறுஞ்செய்தியால் ஓட்டுநர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கைப்பேசியை ஒரு காரணமாக வைத்து கிரேப் கார்களில் ஏறும் இந்த மோசடிக் கும்பலுக்கு எதிராக பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா காலத்தில் கிரேப் கார் நடவடிக்கைகள் குறைந்து விட்டன. அதனால் ஓட்டுநர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

இந்த நேரத்தில் பயணிகள்போல் கிரேப் கார்களில் ஏறி மோசடி செய்யும் கும்பலுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அதே வேளையில், கிரேப் கார்களில் ரகசியக் கண்காணிப்பு கேமரா இல்லாததால் இந்த மோசடிக்காரர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விடுகிறது என்று மணிமாறன் கூறினார்.

இதுவரை 4 பேருக்கு மேற்பட்டவர்கள் இந்த மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படும் ஓட்டுநர்கள் உடனடியாக மோசடிக்காரர்களின் அடையாளம் கண்டு போலீசில் புகார் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கு. தேவேந்திரன் – படம்: தி. மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here