-கடலையும் விட்டு வைக்காத கோவிட்
முகக்கவசங்கள் இல்லாமல் வெளியில் செல்ல இயலாது என்ற நிலை உருவாகிவிட்டது. இது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதற்கு எந்த நாட்டிலும் திட்டவட்டமான பதில் இல்லை.
வாகனத்தில் வெளியே கிளம்பும்முன் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பொருட்களுக்குள் முதன்மையாக இருப்பது முகக்கவசம் என்பது முதன்மையாகிவிட்டது. முகக்கவசம் இல்லாமல் எங்கும் நுழைய முடியாது . பொருட்கள் வாங்க முடியாது. மருத்துவமனைகளுக்கும் செல்ல முடியாது
புறப்படும் முன் முகக்கவசம் இல்லாமல் கிளம்புவதில் அர்த்தமே இல்லை என்று ஆகிவிட்டது. அதே வேளை பழைய முகக்கவசங்களை என்ன செய்கிறீர்கள் என்பதும் கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. இதற்கும் சரியான பதில் இல்லை.
இயக்க நடைமுறை விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படும் வெ.10 ஆயிரம் அபராதத்தை முகக்கவசங்களை அலட்சியமாக வீசுக்கின்றவர்களுக்கும் விதிக்கப்படவேண்டும் என்ற கோபம் இப்போது வெளிபடையாகியிருக்கிறது. சாலைகளில் முகக்கவசங்கள் சிதறிக்கிடக்கின்றன. இது பொறுப்பற்ற தன்மையை உணர்த்துகிறது.
இவற்றை வீசுவதால் வாய்க்கால் வழியோடி நீரோடைகளில் கலந்துவிடுகின்றன. நீரோடை உயிரினங்கள் வீசியெறியப்படும் முகக்கவசங்களில் சிக்கி உயிரிழப்பதாக செய்திகளும் வருகின்றன். கடல்களில் அடியில் உயிரினங்கள் செத்து மடிகின்றன. சிக்கிக்கொண்டு உணவு தேட முடியாமல் தவிக்கின்றன் என்ற செய்திகளும் உண்டு.
இவை செய்திகள் மட்டும் அல்ல. உண்மையும் கூட . இந்த நிலை தொடர்ந்தால் கடல் மீன்களுக்கும், உயிரினங்களுக்கும் கோவிட் – 19 தொற்று ஏற்படும் அபாயம் நேரலாம் அல்லவா! மீன்களும் நஞ்சாகிவிடும் என்ற அச்சம் உருவாக ஆரம்பித்திருக்கிறது.
வீசப்படும் முகக்கவசங்கள் மிகுந்த ஆபத்தானவையாக மாறும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றுக்கும் இயக்க நடைமுறை கட்டுப்பாட்டு விதிமுறைகள் வகுக்கப்படவேண்டாவா?
-கா.இளமணி