சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது!

 

மோதி விளையாடுவது முறையல்ல!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 காலகட்டத்தில் இறப்பு ,அதன் தொடர்பான நல்லடக்கச் சடங்கிற்கான விதிமுறைகளில் சற்று தளர்வுகளை வழங்கி அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும்படி தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது.

இஸ்லாம் அல்லாதவர்கள் பின்பற்ற வேண்டிய எஸ்ஓபி விதிமுறைகளை தேசியப் பாதுகாப்பு மன்றம் வரையறுத்து அமல்படுத்தியிருக்கிறது.
இதனை மீறுவோர் மீது தயவுதாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் முழு முடக்கம் 3.0 அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மதிக்காமல் நம்மவர்களுள் சிலர் மீறி செயல்பட்டிருப்பது பெரும் வேதனையைத் தந்துள்ளது.

ஏன் இந்த அகம்பாவம் – ஏன்  பிடிவாதம், சவப்பெட்டியைத் தோளில் சுமந்துகொண்டு ஆடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வது எல்லாம் ஒரு பெருமையா?

கடந்த ஜூன் 17ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பட்டர்வொர்த்தில் நடந்த இச்சம்பவம் டிக்டோக்  சமூக வலைத்தளத்தில் 56 விநாடிகள் காட்சியாக நகர்கின்றது. மேளம் வாசித்துக்கொண்டு இறந்தவரின் படம் அடங்கிய பதாகையை ஏந்திக்கொண்டு சிலர் நடுரோட்டில் ஊர்வலம் வரும் அந்தக் காட்சி இந்தக் காலத்தில் பதற வைக்கிறது. சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய தலைக்குனிவு?

நோயால் இறந்த 23 வயது இளைஞரின் நல்லுடலுக்குச் செலுத்தும் மரியாதை இதுதானா? இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கட்டம் இதனை அனுமதிக்குமா? யோசித்தார்களா இவர்கள்?

போலீஸ் சும்மா இருப்பார்களா? இதில்  சம்பந்தப்பட்ட 11 பேரை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர். நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இனி இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளப் போகும் துன்பங்கள் என்ன? சிந்தித்தார்களா அவர்கள்?

இஸ்லாம் அல்லாதவர்களின் சவ அடக்கம் அல்லது தகனம் ஆகியவற்றை ஏற்று நடத்தும் நிறுவனங்களின் நிர்வாகங்கள் எம்சிஓ 3.0 முழு முடக்கக் காலத்தில் விதிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் சவ அடக்க நிறுவனங்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக் எச்சரித்தார்.

அண்மையில் பினாங்கில், சவ அடக்கச் சடங்கில் எஸ்ஓபி விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன. அந்தச் சவஅடக்க ஊர்வலத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அமைச்சரின் இந்தக் கடுமையான எச்சரிக்கைக்கு இதுவே காரணமாக அமைந்திருக்கிறது.

இச்சம்பவம் உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவல் காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை அவர்கள் அலட்சியப்படுத்தியிருக்கின்றனர்.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறுவோரின்  செயலை அமைச்சு சகித்துக் கொள்ளாது. நல்லடக்கச் சடங்கை ஏற்று நடத்தும் நிறுவனங்களின் பெர்மிட்டை ரத்துசெய்வதற்குத் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு  தயங்காது என்று டத்தோ ஹலிமா கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

கோவிட்-19 கிருமி பெருந்தொற்றுக்கு எதிரான போரில் அதனை அடியோடு ஒழித்து சமாதி  கட்டுவதற்கு அரசாங்கம் போராடி வருகிறது. இதில் மக்களின் பங்கும் அளப்பரியது. மக்களின் ஒரேமனதான ஒத்துழைப்பு இல்லாமல் இதனைச் சாத்தியமாக்க இயலாது.

மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இத்தகைய போராட்டங்கள். அதில் விளையாடிப் பார்க்கலாமா?

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசாங்கம் சில தளர்வுகளை அனுமதித்திருக்கிறது.

அதனைத் தங்கள் அடாவடிச் செயல்களால் கொச்சபை்படுத்த வேண்டாம். கொடுக்கப்பட்டிருக்கும்  சலுகைகளையும் தட்டிப்பறித்திட வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கிறது. புரிந்துகொண்டால் சங்கடங்கள் இல்லை!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here