முறையான வடிகால் அமைக்கும் நோக்குடன் பணம் வசூலிக்கும் பொதுமக்கள்

கோத்தா திங்கி, ஜனவரி 3 :

தங்கள் வீடுகளுக்குள் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் எரிச்சலடைந்த ஜாலான் மரிகட் பத்து 9, கம்போங் மாவையில் வசிக்கும் சிலர், தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி 300 மீட்டர் நீளமான வடிகால் அமைப்பைக் கட்ட முன்முயற்சி எடுத்துள்ளனர்.

குடியிருப்பாளர் நூர் அஷீசான் மோர்ஸிடி, 35, கூறுகையில், அவர்கள் கடந்த மாதம் மண் அகழும் நடவடிக்கைக்காக, இயந்திரத்தை வாடகைக்கு எடுக்க RM500 ஐ வசூலிக்க முடிந்தது.

முன்பெல்லாம் மழை பெய்தால் கணுக்கால் அளவு வரை நீர்மட்டம் உயரும். அனால் தமது முயற்சியின் பின்னர், வெள்ள நீர் வீடுகளுக்குள் வராததால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.

“நாங்கள் எட்டு பேர் (குடியிருப்பாளர்கள்) எங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்க வடிகால் கட்ட எங்கள் பணத்தைச் சேகரிக்க முடிவு செய்தோம்.

“இதற்கு முன், வெள்ளம் காரணமாக, அலமாரிகள் மற்றும் மெத்தைகள் உட்பட எங்கள் உடைமைகள் நிறைய சேதமடைந்தன. எங்களால் எதையும் காப்பாற்ற முடியவில்லை, அதனால்தான் நாங்கள் வடிகால் தோண்டுவதற்கு நிபுணர்களை நியமித்தோம்,” என்று அவர் மாவாய் வெள்ள நிவாரண மையமான செக்கோலா கேபாங்சானில் (SK) சந்தித்தபோது கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

ஒரு பிள்ளையின் தாயான நூர் அஷீசான், தாம் கடந்த ஐந்து வருடங்களாக இப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் இப்போது, ​​அவரும் அவரது கணவர் பாக்கி அனாக் தவான், 55 மற்றும் மற்றய எட்டு குடும்பங்களும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்றார்.

இருப்பினும், இவ்வடிகால் அமைப்பு நிறைவேற்றப்பட்ட போதிலும், வெள்ளம் காரணமாக அவர்களின் கிராமத்திற்கான பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால், அவர்கள் வெள்ள நிவாரண மையத்திற்கு தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

அதிகாலை 5 மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து சிவில் தற்காப்புப் படை வீரர்களின் உதவியுடன் தானும் அவரது குடும்பத்தினரும் நேற்று மாலை 3 மணியளவில் வெளியேற்றப்பட்டதாக நூர் அஷீசான் கூறினார்.

இதற்கிடையில், ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர், அவரது மகன்களுடன் இன்று நண்பகல் 12.15 மணியளவில் வெள்ள நிவாரண மையங்களுக்கு வந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் சுமார் 20 நிமிடம் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here