கல்விக்கு வேண்டாம் இன பாகுபாடு

இனத்துவேஷம் பொல்லாததாய் ஆகிவிடும்!

பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை – ஒருமைப்பாட்டை வார்த்தெடுக்கும் மையங்களாக – களங்களாக இடைநிலைப் பள்ளிகள் திகழ வேண்டும். பள்ளிகள் மட்டுமே வேற்றுமை இல்லாத மனிதர்களை உருவாக்க முடியும் – பதியம்போட வேண்டும். இதுவே கட்டளை; அக்கட்டளையே சாசனம்!

ஆனால் பள்ளிகளில், குறிப்பாக இடைநிலைப் பள்ளிகளில் இனத்துவேசம், வேற்றுமைகள், பிரித்தாளும் கொள்கைகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. சட்டங்கள் அதற்குக் காரணமானவர்களை ஒன்றுமே செய்வதில்லை. கண்டுகொள்வதில்லை.

மாணவர்கள் அதனைச் செய்வது மிக மிகக் குறைவு. முக்கியப் பொறுப்புகளில் உள்ள சில ஆசிரியர்கள் இந்த இழிச்செயலில் ஈடுபடுகின்றனர். இது வேதனையிலும் வேதனை.

ஜோகூர், பத்து பகாட், டத்தோ பெந்தாரா லுவார் இடைநிலைப் பள்ளி மாலைப் பள்ளி துணைத் தலைமையாசிரியர் 1ஆம் படிவ மாணவர்கள் ஆன்லைன் வழி இணைப்பாட நடவடிக்கைகள் பதிவுக்கான அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் தமிழ்மொழிக் கழகம், இந்திய மாணவர் களுக்கான வாய்ப்புகள் முற்றாக மறுக்கப்பட்டிருக்கின்றன; புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாணவரும் ஒரு சீருடை இயக்கம், 1 கிளப் – சங்கம், ஒரு விளையாட்டு என்று தேர்வு ஙெ்ய்ய வேண்டும். பாடத்திட்டத்தில் இது கண்டிப்பாக்கப்பட்டிருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதில், டத்தோ பெந்தாரா லுவார் இடைநிலைப்பள்ளி மாலை நேரப் பள்ளியின் நிபந்தனைகள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன. அப்பட்டமான இன ஒதுக்கல் அங்கு பளிச்சென வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். தேர்வு பெறாத வர்கள் அந்தப் பதிவுக்கான கோட்டா முழுமை பெற்று விட்டது. (சிஸ்டத்தில் அம்மாணவர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கும்; காணாமல் போயிருக்கும்) என்று அர்த்தமாகுமாம். இதுதான் அந்தப் பெண் துணைத் தலைமையாசிரியர் தந்திருக்கும்  அபூர்வ , தன்மூப்பான விளக்கம்.

அதே சமயம் விடுபட்ட மாணவர்கள் மற்ற பிரிவுகளில் உள்ள காலி இடங்களைத் தேர்வு செய்யலாம். (இது பலவந்தமான திணிப்பாகும்). ஒருமுறை பதிந்து விட்டால், அந்த விருப்பத் தேர்வை மாற்றிக் கொள்ள முடியாது. மேல் முறையீடு எதுவும் பரிசீலிக்கப்படமாட்டாது.

மொழிக் கழகம் – சங்கம் என்ற நிலையில் மலாய், ஆங்கிலம், சீனம், பௌத்தம் போன்றவை இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ்மொழிக் கழகத்திற்கு இடமில்லை. நன்னெறி கல்விப் பிரிவில் சீன – இந்திய மாணவர்கள் மட்டுமே இடம்பெற முடியும்.

அதேபோல் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை ஹாக்கி (ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மட்டுமே), கால்பந்து (மலாய் மாணவர்கள் மட்டுமே), வலைப்பந்து (மலாய்ப் பெண்கள் மட்டுமே), கூடைப்பந்து (சீன ஆண் – பெண் மாணவர்கள் மட்டும்), செப்பாக் தாக்ரோ (மலாய் ஆண் மாணவர்கள் மட்டும்), பிங் போங் (சீன ஆண் – பெண் மாணவர்கள் மட்டும்) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

மலேசியக் கல்வி முறை மிக மோசமான நிலையில் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் விளையாட்டு, இதர இணைப்பாட நடவடிக்கைகளிலும் இப்படி இன ஒதுக்கல் இருப்பது மிகவும் வெறுப்பன செயலாக உள்ளது.

பள்ளிகளிலேயே இந்த இன விஷம் விதைக்கப்பட்டால் பின்னாளில் அது எல்லா நிலைகளிலும் வளர்ந்து நிற்கும் என்பது கூடவா இனவெறி பிடித்த ஆசிரியர்களுக்குத் தெரியாது – புரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அசிரியர்களுக்கான உயர்ந்த தகுதி இல்லாமல் போனதேன்? எந்த் நோக்கில் ஆசிரியர் பணியைத்தேர்வு செய்தார்கள்?

இதனிடையே இவ்விவகாரத்தை கல்வி அமைச்சு கடுமையாக எடுத்துக் கொண்டிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட துணைத் தலைமையாசிரியருக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத வரையில் நீறுபூத்த நெருப்பாகவே இவ்விவகாரம் புகைந்து கொண்டிருக்கும்.

பள்ளிகளில் இனத்துவேஷம், இன ஒதுக்கல் பூஜ்ஜியம் (0) அளவில் இருப்பதை கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும். 

உயர்கல்வி வாய்ப்புகளுக்கு இணைப்பாட புள்ளிகள் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகின்ற நிலையில் அந்த வாய்ப்புகள் மாணவர்களுக்கு மறுக்கப்படுவது பெரும் பாவமாகக் கருதப்பட வேண்டும் – ஆணி அடித்தாற்போல் மண்டையில் ஓங்கி அறையப்பட வேண்டும்.

இதனிடையே இந்த இடைநிலைப் பள்ளியின் முதல்வரை நேற்று சந்தித்த ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இஸ்கந்தார், ஜோகூர் மாநிலத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் இன ஒதுக்கல், பாகுபாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.

சமுதாயங்களைப் பிளவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அவர்  உத்தரவிட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.

கல்வி பொதுமை சார்ந்தது. 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here