திமுக அரசிடம் மலேசியத் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

தமிழக தேர்தல் முடிவுகள்ஓர் எதிர்பார்ப்பு!

தமிழகத் தேர்தலை மலேசியத் தமிழர்களும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமைய இருப்பது மலேசியாவில் உள்ள அக்கட்சி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அடுத்தடுத்து வெளிவந்த தேர்தல் தொடர்பான தகவல்கள், முடிவுகளை மலேசியத் தமிழ் ஊடகங்கள் உடனுக்குடன் வெளியிட்டன.

தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட தேர்தல் கண்ணோட்ட நிகழ்ச்சிகளும் மலேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் புதிய அரசிடம் இருந்து தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து மலேசியத் தமிழர்கள் பிபிசி தமிழிடம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலினை முதல்வராக ஏற்ற தமிழக மக்கள்

தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை தங்கள் முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகச் சொல்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த கணினி வடிவமைப்பாளர் இராம சரஸ்வதி.

மேலும், வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்ற கூற்றும் முடிவுக்கு வந்திருப்பதாகத் தோன்றுகிறது என்று அவர் கூறுகிறார்.

“கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி என்ற வரிசை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழக மக்கள் இதைப் பொருட்படுத்தவில்லை.

“உதயநிதியைப் பொறுத்தவரையில் சினிமாவில் கலகலப்பான, ஜனரஞ்சகமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ளார். இளம் வயதிலேயே கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர், அடுத்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.”

“இந்த வெற்றியை திமுக நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மலேசியத் தமிழர்களின் வேர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனவே தமிழகத்தில் அமையும் புதிய அரசு எங்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார் இராம சரஸ்வதி.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு சிறப்புச் சலுகைகள்

திமுகதான் இம்முறை வெற்றி பெற வேண்டும் என தாம் விரும்பியதாகவும் அவ்வாறே நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சொல்கிறார் கேமரன் மலையைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கணேசன்.

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து செல்ல நீண்ட கால விசா கிடைப்பதற்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மங்கள நிகழ்வுகள், ஆன்மீகப் பயணங்கள், மருத்துவச் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக மலேசியத் தமிழர்கள் இந்தியாவுக்கு வருகிறோம். இதற்கான விசாவைப் பெறவும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தவும் சிரமப்படுகிறோம்.”

“எங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் விசா கிடைத்தால் நன்றாக இருக்கும். விசா கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் புதிதாக அமைய உள்ள தமிழக அரசு பேச வேண்டும்.

குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கலாம். சிகிச்சைக் கட்டணத்தில் தள்ளுபடி, விசா நீட்டிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் உதவியாக இருக்கும்,” என்கிறார் கணேசன்.

மலேசியத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு விருது

மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதில் புதிய திமுக அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புவதாக மூத்த செய்தியாளரும் மலேசியத் தமிழ் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கு.தேவேந்திரன் கூறுகிறார்.

மேலும், மலேசிய தமிழ் படைப்பாளிகளுக்கும் செய்தியாளர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் விருதும் உதவியும் வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

“மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருப்பது தொப்புள் கொடி உறவாகும். மலேசியத் தமிழர்கள் இதை என்றும் மறக்க மாட்டார்கள். கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை தனது உழைப்பால் நிரப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனியே ஒரு துறை அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்துள்ளது. அதை நிச்சயம் செய்ய வேண்டும். அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பல நன்மைகள் விளையும்.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை பார்க்க வருகிறார்கள். அவர்களில் சிலர் தமிழகத்தில் உள்ள போலி முகவர்களால் ஏமாற்றப்படுவதும், மலேசியா வந்த பிறகு வேலை கிடைக்காமல் அகதிகளைப் போல் வாழ்வதாக வெளிவரும் செய்திகளும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு நிகழாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டால் இந்தச் சிக்கலுக்கு முடிவு கிடைக்கும்,” என்கிறார் கு.தேவேந்திரன்.

ஜெயலலிதா இல்லாமல்

கடந்த பத்தாண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுக, இம்முறை கிட்டத்தட்ட எழுபதுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்கிறார் கோலாலம்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன்.

பொதுவாக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி காரணமாக அதிமுக படுதோல்வி அடையும் என்று கூறப்பட்டதையும், ஜெயலலிதாவின் தலைமைத்துவம் இல்லாததையும் கடந்து அக்கட்சி இந்தளவு சாதித்திருப்பதே பெரிய விஷயம்தான் என்று அவர் கூறுகிறார்.

“திமுக என்றாலே வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறப்படுகிறது. இந்த முறையும் அக்கட்சியில் வாரிசுகள் பலர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். எனவே சிறந்த நிர்வாகத்தை வழங்குவதன் மூலம் தங்களுடைய வேட்பாளர் தேர்வு சரியாக உள்ளது என்பதை அக்கட்சித் தலைமை நிரூபிக்க முடியும்.

“கொரோனா விவகாரத்தால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நிலைமை அப்படித்தான் இருப்பதாக கேள்விப்படுகிறேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து திமுக அரசு மக்கள் மீண்டுவர உதவ வேண்டும்,” என்கிறார் ராஜேந்திரன்.

ஆன்மிகத் தலங்களைத் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு

திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்கிறார் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த பயண நிறுவன உரிமையாளரான கே.பி.சாமி.

தமிழகத்தில் இருந்து பணி நிமித்தம் தொழிலாளர்கள் மலேசியாவுக்குச் செல்வதை முறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

“மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் தொழிலாளர் நலன் சார்ந்த சில சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. தமிழகத்திலும் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களைக் கொண்ட ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

“குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த காரணங்களைத் தவிர மலேசியத் தமிழர்கள் ஆன்மிகச் சுற்றுப் பயணத்துக்காகத்தான் அதிகளவில் தமிழகம் செல்கிறார்கள். இவர்கள் தமிழக கோவில்களை, ஆன்மிகத் தலங்களைச் சுற்றிப்பார்க்கவும் தரிசிக்கவும் சிறப்புச் சலுகைகளுடன் கூடிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை.

“திருப்பதியில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு என சிறப்பு தரிசன சலுகை உள்ளது. அதே போல் தமிழக அரசும் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

“ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவை யாரும் நெருங்க முடியாத கட்சியாக வைத்திருந்தார். மக்களுடன் அவரது ஆட்சி நெருக்கமாக இருந்தது. ஆனால் அவருக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை எனத் தோன்றுகிறது,” என்கிறார் கே.பி.சாமி.

பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கென தனி இருக்கை

திமுக ஆட்சியில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு என தனி அமைச்சு அமைக்கப்படும் என்று தேர்தலுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்கிறார் அரசியல் பார்வையாளர் இரா.முத்தரசன்.

பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி திமுக பெற்றுள்ள வெற்றி தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“தங்களுக்காக தனி அமைச்சு அமைக்கப்படும் என்பதால் திமுகவின் வெற்றி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது எனலாம். காரணம் அவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை நிச்சயம் உதவும். மேலும் தமிழர்கள் வருகையும் அதிகரிக்கும்.

“பல நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கென தனி இருக்கையை நிறுவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் இத்தகைய முயற்சிக்கு ஆதரவு அளித்து வந்தனர். குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் திமுக மொழி வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பலாம்.

தேர்தல் முடிவுகளின்படி, அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மிக குறைவான விழுக்காடு வித்தியாசத்தில்தான் ஆட்சியாளர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தனித்தலைவராக உருவெடுத்துள்ளார். அவர்தான் புதிய எதிர்க்கட்சித் தலைவர் என்பது உறுதியாகி உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பொறுப்பை வகித்து திமுகவுக்கு எதிராக எப்படி அரசியல் செய்வார் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் அடுத்தகட்ட வளர்ச்சி இருக்கும்.

டிடிவி.தினகரன் பொறுத்தவரை இத்தேர்தலில் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. குறைந்தபட்சமாக தாம் போட்டியிட்ட தொகுதியில்கூட அவர் வெற்றி பெறவில்லை. சசிகலாவோ அரசியல் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். ஒருவேளை அதிமுக மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தால் சசிகலா மீண்டும் அரசியல் களம் காண்பதில் ஓர் அர்த்தம் இருக்கும். அவருக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால் இன்றைய சூழலில் தினகரனும் சசிகலாவும் இல்லாமலேயே அதிமுக கணிசமான தொகுதிகளை வென்றெடுத்துள்ளது. எனவே அவர்கள் இருவராலும் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். இருவரும் அதிமுகவில் இணைந்தால் மேலும் பல குழப்பங்களுக்குத்தான் அது வித்திடும்.

“பாஜக பொறுத்தவரையில் தமிழகத்தில் ஓரளவு காலூன்றி உள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த முறை ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்ற அக்கட்சி, இம்முறை 70க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது பெரிய சாதனை.

“தமிழகத்தில் அப்படியொரு வெற்றியைப் பெறாவிட்டாலும் நான்கைந்து தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது அந்தக் கட்சிக்கு நல்ல வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும்,” என்கிறார் இரா.முத்தரசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here