ஊனம் குறையல்ல – வாழ்க்கைச் சவால்!

வருமானத்திற்கான எதிர் நீச்சல்

ரமேஸ்  சுப்ரமணியம் (வயது 30). முதுகுத் தண்டு சீர்குலைவால் இயல்பாக நடக்க முடியாது. வாழ்க்கையில் பெரும் பகுதியை ஒரு துணையுடன்தான் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

வேலை தேடி அலைந்து அலைந்து களைத்துப்போன பின் அண்மையில் ஒரு நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணியில் அமர்ந்தார். உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சிதைவு தன்னுடைய! வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிட்டது என்று அவர் மனச்சோர்வுடன் குறிப்பிடுகிறார்.

பிறந்தது முதலே தனக்கு இந்தக் குறை உள்ளது என்ற அவர், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகப் பல சிரமங்களில் ஊன்றுகோல் மற்றும் செயற்கை கணுக்கால் பாகம் அணிந்து நடமாடுவதுதான் சிரமத்தின் உச்சம் என்கிறார் அவர்.

சரியான கல்வி இருந்தாலும் திறமைகள் இருந்தாலும் காலூன்றி நிமிர்ந்து சுயமாக நடக்க இயலாது போனால் வேலை வாய்ப்பு என்பது குதிரைக் கொம்புதான்.

இரண்டு ஆண்டுகள் இடைவிடாத முயற்சிகள் – தேடல்களுக்குப் பின்னர் இப்போது ஒரு வேலை கிடைத்துள்ளது. திறமைக்குக் கிடைத்ததாக நினைக்க முடியவில்லை. இருப்பினும் ஒரு வருமானம் வருகிறது என்பதால் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் விவேகம் என்று நினைத்தேன். வேலையிலும் சேர்ந்தேன் என்கிறார்.

என்னைப் போன்றவர்களுக்குச் சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டும். அந்த வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வேலை தேடி அதில் சேர்வதுதான் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஒரே வழி.

தன் தாயாருடன் வாழ்ந்து வருகிறார் ரமேஸ். கிடைக்கும் வருமானத்தைத் தாயிடம் தருகிறார். தன் தாய் ,  பாட்டி ஆகியோரின் ஆதரவும் ஊக்கமும்தான் தன்னை ஒரு மனிதனாக தலைநிமிர வைக்கிறது என்று மிகுந்த நன்றியுணர்வுடன் கரம் கூப்புகிறார் சுப்ரமணியம்.

ரமேஸ் போன்ற உடல் அமைப்பில் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வேலையில் அமர்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்பல சிரமங்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

இந்தத் துன்ப அத்தியாயத்தில் ரமேஸ் மட்டும் இடம்பெற்றிருக்கவில்லை. இவர் போன்று உடலில் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வேலையைத் தேடி அமர்வதில் எதிர்கொள்ளும் அவலங்களும் சவால்களும் அந்த உடல் வலியைவிட கொடூரமானதாக இருக்கிறது. வெறும் வார்த்தைகளால் அதனை வருணித்திட முடியாது.

ஊன்றுகோல்தான் ரமேஸின் நிரந்தர துணை. முழங்காலில் பொருத்தப்பட்டிருக்கும்  செயற்கை கணுக்கால் கருவி அவரை ஓரளவு நிற்க வைப்பதற்கு உதவுகிறது. இவற்றின் துணை இன்றி அவரால் எங்கும் நகரவே முடியாது.

அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. எல்லா இடங்களுக்கும் இவர்களால் சுதந்திரமாகச் சென்று வர இயலாது. பெரும்பாலான இடங்கள் இவர்களது நகர்வுகளுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

ரமேஸ் தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் தன்னைப் போன்றவர்களுக்கு மலேசிய டாமாய் உடல் குறை உள்ளவர்கள் சங்கத்தின் துணை தலைமைச் செயலாளராக இருந்து பல்வேறு உதவிகளையும் வழிகாட்டிகளையும் வழங்கி வருகிறார்.

அங்கு தான் பெற்றவற்றை இப்போது தன் போன்றவர்களுக்கு திருப்பிக்கொடுத்து வருகிறார்.

பொதுவாக உடல் குறை உள்ளவர்கள் மீதான பொதுமக்களின் பார்வை எதிர்மறையாகவே உள்ளது. சமயங்களில் மனம் நொந்துவிடும்.

ஆனால் என் அம்மா, நண்பர்கள் ஆகியோரின் பலமிக்க ஆதரவு எனக்கு இருப்பதால் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியே. வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தைப் பெறுவதில் இவர்கள் எனது நம்பிக்கையின் பலமாக உள்ளனர் என்கிறார் ரமேஸ்.

உடலில் குறை இருந்தாலும் எண்ணத்திலும் சிந்தனையிலும் ரமேஸ் உயர்ந்து நிற்கிறார். தன் குறையைப் புறந்தள்ளிவிட்டு சாதிக்கப் போராடுகிறார். வெற்றி அவரை அரவணைக்கட்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here