சித்திரம் தீட்ட சுவர் வேண்டும்

சுவர் என்பது மக்கள்

மலேசியாவின் புதிய கோவிட்-19 முறியடிப்பு நடவடிக்கைகள் முற்றிலும்  சாமானியர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.

முதலாளி தரப்பினருக்கு ஆதரவாகவும் சாதாரண மக்களுக்குப் பாதகமாகவும் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ 3.0) விதிமுறைகள் அமைந்துள்ளன.

முழு முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கிப் போட்டு விடும் என்பது அரசாங்கத்தின் விளக்கமாக இருக்கிறது. ஆனால் மக்கள் உயிரோடு இருந்தால்தான் அந்தப் பொருளாதாரத்திற்கும் (பணத்திற்கும்) மதிப்பு. மக்கள் இல்லாத பணம், உப்பில்லா பண்டத்திற்குச் சமம்.

இதற்கு மிகச் சரியான முன்னுதாரணமாகத் திகழ்வது நம் நாட்டின் நாடாளுமன்றம். கூட்டம் நடத்தினால் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். கோவிட்-19 தொற்று பரவி விடும் என்று மத்திய அரசாங்கம் அஞ்சுகிறது.

இதனால் பொதுத்தேர்தலில் வாக்களித்து இவர்களைத் தங்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த வாக்காளர்களும் பொதுமக்களும்தான் பல்வேறு வகைகளில் அல்லாடியும் திண்டாடியும் வருகின்றனர்.

நாடாளுமன்றம் முழுமையாக முடக்கம் கண்டது. புதிய தொற்றுகள் இல்லை. புதிய திரள்களும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் மாதம் தவறாமல் சல்லிக்காசுகூட குறையாமல் முழுமையான அலாவன்சுகளையும் ஊதியத்தையும் பெற்று வருகின்றனர்.

நாடாளுமன்றம் செயல்படவில்லை – வேலையும் நடக்கவில்லை. இருப்பினும் தவறாமல் சம்பளம் மட்டும் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தவர்கள் வாழ்வாதாரப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

நாடு முழுமையிலும் எம்சிஓ 3.0 அமலுக்கு வருகிறது. தொழில்துறைகள் காலை 8.00 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரை ஙெ்யல்படலாம். இது முற்றிலும் முதலாளிமார்களுக்கு சாதகமான ஒரு முடிவு என்று சாமானியர்களும் அன்றாடங் காய்ச்சிகளும் குமுறி வருகின்றனர்.

தற்போது ராக்கெட் வேகத்தில் எகிறிவரும் கோவிட்-19 புதிய தொற்றுகள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டதாவே இருக்கிறது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கூறியிருக்கிறார்.

அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. எங்கு கைவைக்க வேண்டுமோ அங்கு கை வைக்காமல்  இருக்கு ஆனா இல்லை என்பதுபோல் இந்த எம்சிஓ 3.0 அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேவைகளுக்குத்தான் ஆதாயம். மக்கள் வாழ்வாதாரத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை முதலாளிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது.

எம்என்சி எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை 14 முதல் 29 நாட்களுக்கு இழுத்து மூடினால் நாட்டில் கோவிட்-19 தொற்றுகள் அதிசயத்தக்க வகையில் குறையும்.

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென சரியும். மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவர். அரசாங்கத்தின் சுமைகளும் குறையும்.

காலையில் 6.00 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள் காலை உணவுக்கு எங்கு செல்வார்கள்? வீட்டில் இருந்து எடுத்து வரலாமே என்ற குரலும் கேட்கவே செய்கின்றது. எத்தனை பேருக்கு இது சாத்தியம்? வாதங்கள் விதண்டாவாதங்களாக மாறினால் இப்படி எதிர்மறையான சிந்தனைகள்தாம் வந்து விழும்.

பணம்தான் பிரதானம் என்றால் மக்கள் நலன் என்ன ஆவது? எம்சிஓ என்பது மிக மிகக் கடுமையான கட்டுப்பாடுகளால்தான் எதிர்பார்த்த பலனைத் தரும். அந்த விதிமுறைகளுக்கு ஈடான – சரிசமமான நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே வெற்றிபெறும்.

கால அவகாசம் வாங்குவதற்காக எம்சிஓ 3.0 விதிக்கப்பட்டிருந்தால் மக்களின் வாழ்வாதாரத்தில் அது எத்தகைய பாதகங்களைக் கொண்டு வரும் என்பதை அரசாங்கம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கைகளில் தொற்று எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கவனமும் திரும்ப வேண்டும். கடந்த ங்னிக்கிழமை அறிவிக்கப்பட்ட எம்சிஓ 3.0 விதிமுறைகளில் கிட்டத்தட்ட 50 தொற்றுகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் சுகாதார முன்னெடுப்புகள் பற்றிய ங்ரியான தெளிவு இல்லை.

கடுமையான விதிமுறைகள் என்பது இங்கு இரண்டு முகங்களைக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here