நிதிக் கொள்கையில் மாற்றங்கள் தேவை

நாடு நலம் பெற நலமிகு திட்டங்கள்

கோவிட்-19 ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடிமிக்க காலகட்டத்தில் நாட்டின் நடப்பு நிதி நிலையைச் சரி செய்வதற்கு அரசாங்கம் சில கடுமையான மாற்றங்களைச் செய்ய வேண்டி இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

அரசாங்கத்தின் மொத்த செலவுகள் பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் எங்கெல்லாம் வெட்ட வேண்டும் என்ற ஒரு தெளிவான நிலைக்கு வர முடியும் – புதிய நிதி நிலைக்கு அடித்தளமிட முடியும் என்று பேங்க் நெகாரா முன்னாள் துணை கவர்னர் டான்ஸ்ரீ டாக்டர் லின் ஸி யான் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இதற்கு முதல் கட்டமாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2021 பட்ஜெட் இனியும் வேண்டாம் – அதனை ஒதுக்கி வைத்து விடலாம். நாட்டின் நடப்பு நிலைக்கு ஏற்ப ஒரு புதிய பட்ஜெட்டை மத்திய அசாங்கம் தயாரித்து அமல்படுத்த வேண்டும்.

2021 பட்ஜெட்டிற்கும் நடப்பு பொருளாதார நிலைக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதை முழுமையாக உணர்ந்து – தெளிந்து கோவிட்-19 தாக்கத்தால் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிதி நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையில் புதிய வரவு – செலவு (பட்ஜெட்) வரையப்படவேண்டும் என்று டான்ஸ்ரீ டாக்டர் லின் வலியுறுத்தியிருக்கிறார்.
காலத்தின் தேவை அறிந்து அவர் சிந்தித்திருக்கிறார். ஆலோங்னைகளையும் முன் வைத்திருக்கிறார். ஒவ்வொரு துறைக்கும் என்ன தேவை என்பது புதிய பார்வையில் அலசப்பட வேண்டும். பூஜ்ஜியத்தில் அது தொடங்கினால் மட்டுமே நிலைமையைச் சமாளிக்க முடியும்.

இந்த நிதி மறுமலர்ச்சித் திட்டமானது அரசாங்க சேவைத் துறையில் இருந்து தொடங்கப்பட வேண்டும். முதலில் மொத்த நடைமுறைச் செலவில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் அரசு சேவையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட வேண்டும். அத்தியாவசியம் இல்லை எனக் கருதப்படும் அனைத்துத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

பிரதமர், மூத்த அமைச்சர்கள் (துணை பிரதமர் அந்தஸ்தில் இருப்பவர்கள்), அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது சம்பளம் நிதி நிலைமை சீரடையும் வரை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்.

இவற்றில் இருந்து சேமிக்கப்படும் நிதியை எதற்கு அதிகமாகத் தேவைப்படுகிறதோ அதற்குப் பயன்படுத்தலாம். கோவிட்-19 பொருளாதாரத் துறைகளில் ஏற்படுத்தியிருக்கும் சேதங்கள் தலைதூக்க முடியாத அளவில் உள்ளன.

அரசாங்கத்துறை சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதன் மூலம் பணியாளர் எண்ணிக்கையைக் கணிசாமாகக் குறைக்கலாம். பாதிக்கப்படுபவர்களுக்கு மறுபயிற்சி தந்து மற்ற வேறு துறைகளுக்கு மாற்றி விடலாம். அமலாக்கத் துறைகளை அரசாங்கம் பரிசீலிக்கலாம்.

டிஜிட்டல் மயத்திற்கு மாறுவது என்பது எதிர்வரும் சாவால்களைச் சமாளிப்பதற்கு உரிய களமாகும். இதில் அரசாங்கம் சற்று கூடுதல் கவனமும் ஆய்வும் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதே சமயம் பணக்காரர்களிடம் கூடுதல் வரி விதிப்பது நல்ல ஒரு சிந்தனையாகும் என்று சன்வே பிஸ்னஸ் ஸ்கூல் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டாக்டர் இயா கிம் லியோங் பரிந்துரை செய்துள்ளார்.
ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உன்னதத் திட்டங்களுக்கு இந்தப் பணக்காரர்கள் பெருமனத்தோடு உதவுவார்கள் என்று இயா நம்புகிறார்.

இதனையும் மிகக் கவனமாகச் செயல்படுத்த வேண்டும். நீண்ட காலத்தில் மிகப்பெரிய பயன்தரும் என்று பணக்காரர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தரும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தங்களுக்கு ஓர் ஆதாயம் இருக்கிறது என்று நம்பும் பட்சத்தில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அவர்கள் கைகொடுப்பர் என்பதில் ஐயமில்லை.

பெருஞ்செலவுகளைக் குறைத்தால் மட்டுமே கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும். கடுமையான மாற்றங்கள் புதிய பொருளாதார எழுச்சியை ஏற்படுத்தும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here