எம்40 தரப்பினருக்கு விரைவான உதவி

 

நாட்டில் மக்கள் வருமானத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். உயர் வருமானம் பெறுபவர் கூ20, நடுத்தர வருமானப் பிரிவினர் –40 (எம்.40), குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள்  பி40 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒவ்வொரு நாளும் பி40 பிரிவினர் பேசப்படுகின்றனர். உதவிகள் யாவும் அவர்களை இலக்காகக் கொண்டே நகர்கின்றன. இந்நிலையில் எம்40 பிரிவினர் மறக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

இருக்கிறார்கள். ஆனால், இல்லை என்பதுதான் இவர்களின் விவகாரம் இருக்கிறது. நடுத்தர வருமானப் பிரிவினர் பற்றி இதுவரையில் யாரும் யோசிக்கவே இல்லை – மறந்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

உண்மை நிலையில் இந்த கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் இவர்களின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். வாய்விட்டு கதறக்கூட முடியாத ஓர் இக்கட்டான நிலையில் இவர்கள் இருப்பதுதான் நிதரசனம்.

அரசாங்கத்தின் இந்த கோவிட்-19 கால உதவிகள் எதனையும் பெற முடியாத நிலையில் எம்40 பிரிவைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்களில் பலர் இந்த கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார வீழ்ச்சியில் இவர்களும் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களில் சிலர் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் மிக மோசமாகப் பின்தள்ளப்பட்டிருக்கின்றனர். எம்40 பிரிவு என்பதால் அரசாங்கத்தின் பார்வை இவர்கள் மீது விழவே இல்லை.

எம்40 பிரிவைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒன்றுக்கு 4,000 வெள்ளி அல்லது அதற்கு சற்று மேலதிகமாகச் சம்பாதிப்பவர்கள்தான். புறநகர்ப் பகுதிகளில் அவர்களின் இந்த வருமானம் சற்றே செளகரிய வாழ்க்கைக்குப் போதுமானதுதான்.

ஆனால், வானை முட்டும் அளவில் விலைவாசிகள் கழுத்தை நெரிக்கின்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்களாக இருந்தால் இந்த 4,000 வெள்ளி கண்டிப்பாகப் போதாது.

அதுவும் கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார இழப்புகளில் எம்40 பிரிவினரும் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்தின் அளவு, வருமானம் ஈட்டும் ஒருவரைச் சார்ந்து எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பது எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதது மிகப்பெரிய வேதனைதான்.

இதுமட்டுமன்றி அவர்கள் சம்பந்தப்பட்ட பல விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததும் துரதிர்ஷ்டம்தான். இந்தப் பிரிவு கோடுகள் இனியும் வேண்டாம். அதற்கு இனி அவசியமும் இல்லை. கோவிட்-19 முன் இவை எல்லாம் மண்டிபோட்டுவிட்டன.

ஒவ்வொரு குடும்பத்தின் உண்மையான வாழ்க்கை நிலை என்ன என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்வதற்குரிய காலம் கனிந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் முழு விவரங்களைத் திரட்டி அதன் விவரங்களைத் தரவுகளாகப் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயமாகி இருக்கிறது.

இதன்மூலம் உண்மையாக தேவைகள் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஓர் ஊற்றுக்கண்ணாக இருக்க முடியும்.

தேவையான விவரங்களைத் தருவதற்கு உள்நாட்டு வருமான வாரியம், இபிஎஃப் போன்றவை ஓர் அத்தியாவசிய – ஆக்கப்பூர்வ களங்களாக இருக்கின்றன.

இந்த உதவிகளை வழங்குவதற்குப் பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். எம்40 பிரிவில் உள்ள அநேகர் தற்போது பி40 பிரிவுக்கு வந்துவிட்டனர் என்பதுதான் இன்றைய உண்மையான நிலை.

ஆனால், எம்40 பிரிவினரின் இந்த அவல நிலையை எடுத்துக் காட்டுவதற்குத் தேவையான துல்லியமான தரவுகள் இல்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தேவைகள் இருந்தும் உதவிகளுக்குத் தகுதி பெறாதவர்களாக எம்40 தரப்பினர் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இவர்கள் ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கின்றனர். மன உளைச்சலின் உச்சத்தில் இருக்கின்றனர்.

எம்40 பிரிவைச்சேர்ந்தவர்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் உள்ளனர். சம்பளத்திற்கு ஏற்ற செலவுகளும் இருக்கின்றன. பொருளாதார சீர்குலைவால் பெரும் இழப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

இந்தப்பிரிவுகள கோடுகளை அழித்துவிட்டு அரசாங்கத்தின் உதவிகள் எம்40 தரப்பினரை விரைந்து சென்றடையட்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here