பூஜை அறையில் தீபம் ஏற்றலாம் வாங்க.

தீபம் என்றால் ஒளி அல்லது சுடர் என்று பொருள். தீபம் எவ்வாறு இருளிலிருந்து ஒளியை கொடுக்கின்றதோ அதுபோல அனைவரது வாழ்விலுள்ள இருளை விலக்கி இறைவன் அருளை பெறுவதற்கு தீப வழிபாடு முக்கியமானது.

நாம் அனைவரும் வீட்டில் ஒவ்வொரு நாளும் நமது பூஜை அறையில் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றோம். ஆனால், தீபம் ஏற்றுவது தொடர்பில் இந்து தர்மம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

விளக்கு ஏற்ற உகந்த நேரம்
நமது வீட்டின் பூஜை அறையில் காலை 6 மணிக்கு முன்னர் தீபம் ஏற்ற வேண்டும் அதாவது சூரிய உதயத்திற்க்கு முன்னர் நாம் தீபங்களை ஏற்ற வேண்டும். அதுபோல் மாலை 6 மணிக்கு முன்னதாக தீபம் ஏற்ற வேண்டும் அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் தீபங்களை ஏற்ற வேண்டும் என்றும் எல்லாவற்றையும் விட சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்தம் என்கின்றது சாஸ்திரங்கள்.

எத்தனை முகங்களுடைய விளக்கு ஏற்ற வேண்டும்
பூஜையறையில் விளக்கு ஏற்றினாலேயே சிறப்பு. இருப்பினும் எத்தனை முகங்கள் ஏற்றினால் என்ன நன்மை என்று பார்க்கலாம்.

ஒற்றை முகம் (ஒரு திரியில் ஏற்றும் தீபம்) ஏற்றினால் நன்மையான பலன்களை மிக மத்திமமாக (குறைவாக) கொடுக்கும், இரண்டு முகம் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும், மூன்று முகம் குழந்தைகள், புத்திரர்கள், பேரர்கள் என புத்திர சம்மந்தப்பட்ட இன்பங்களை பெற்று தரும், நான்கு முகம் மாடு, மனை , வீடு, வாசல் என்று அஷ்டலட்சுமிகளின் அருளோடு நமக்கு செல்வத்தை தரும், ஐந்து முகங்கள் வீட்டில் செல்வம் எப்போதும் செழித்துக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பொதுவாக எல்லா வீடுகளிலும் காமாட்சி விளக்கு ஏற்றுவது வழக்கம். இருப்பினும் ஐந்து முகங்கள் கொண்ட குத்துவிளக்கு ஏற்றுவது மிகச்சிறப்பு ஆனால், இக்குத்துவிளக்கை ஜோடியாக ஏற்ற வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அத்தோடு ஒற்றை விளக்கு ஏற்றுவதை விட இரண்டுக்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்றுவது நன்மை தரும். எனவே காமாட்சி விளக்குடன் சேர்த்து (4) சிறு சிறு விளக்குகளையும் நாம் ஏற்றிக் கொள்ளலாம்.

எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்

விளக்கு எந்தப்பக்கம் பார்க்கிறதோ அதுவே திசையாகும் தீபச்சுடருக்கு திசையில்லை. எனவே விளக்கு கிழக்கு திசை பார்க்க தீபம் ஏற்றினால் துன்பம் அனைத்தும் நீங்கும் , மேற்குதிசை கடன் நீங்கி தோசங்களை நீக்கும், வடக்குதிசை செல்வம் அறிவு ஞானம் என்பவற்றை வழங்கும் தெற்கு திசை நோக்கி தீபங்களை ஏற்றக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here