மீட்சித் திட்டங்களால் மக்களைக் காப்பாற்ற முடியுமா?

எதிர்க்கட்சித் தலைவரான அன்வார்  கேள்வி!

அரசாங்கம் அறிவித்திருக்கும் தேசிய மீட்சித் திட்டம் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களை மீட்க முடியுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் கொஞ்சம் சீரமைப்புச் செய்யப்பட்டதாக உள்ளது. அதே சமயம் பெரிய நிறுவனங்களையும் நிதிக் கழகங்களையும் பாதுகாப்பதில்தான் அது முக்கியத்துவம் அளிப்பதுபோல் உள்ளது என்று அவர் சொன்னார்.

250 பில்லியன் வெள்ளி என்பது பெரிதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் 10 பில்லியன் வெள்ளிதான் செலுத்தப்படுகிறது. எஞ்சிய தொகை மக்களின் பணமாக ஐசினார், வங்கிகளுடனான கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பான தொகையாக உள்ளது என்று அவர்  சொன்னார்.

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் சலுகைகூட இன்னும் உறுதியானதாகத் தெரியவில்லை. ஏனெனில் வங்கிகளுக்குச் சென்று புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். வட்டித் தொகையைச் செலுத்த வேண்டும்.

இவை அனைத்தும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதில்லை. மாறாக, பெரிய நிறுவனங்களையும் வங்கிகளையும் காப்பாற்றும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார்.

உண்மையிலேயே மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் கொஞ்சம் சிரமப்பட வேண்டும். கடன் தொடர்பான சலுகையை வழங்குவதால் மட்டும் வங்கிகள் வீழ்ச்சி கண்டு விடாது. மாறாக கோடிக்கணக்கான வெள்ளி லாபத்தை அது பெற முடியும் என்று அவர் முகநூல் வாயிலாக நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்.

150 பில்லியன் வெள்ளி மதிப்பைக் கொண்ட பெமூலே எனும் பொருளாதார உதவித் திட்டம் கொண்டு வரப்படும் என்று ஜூன் 28ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருந்தார்.

பெமெர்காங்சா, பெமெர்காங்சா பிளஸ் ஆகிய 340 பில்லியன் வெள்ளியை உள்ளடக்கிய நிதி உதவித் திட்டங்களையும் 150 பில்லியன் வெள்ளியை உள்ளடக்கிய பெமூலே திட்டத்தையும் வரவேற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார்  சொன்னார்.

ஆனால், நீடிக்கும் கோவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இந்தத் திட்டங்களே போதுமானவை என்ற கருத்துடன் இவை அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அறிவித்திருக்கும் நிதி உதவித் திட்டங்களின் மொத்தத் தொகை கற்பனை எண்களாகவே உள்ளன . எதிர்பார்க்கப்பட்டதைவிட மத்திய அரசாங்கத்தின் வருமானம் அதிகமாக சரிவு கண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here