சாமான்யர்களின்   மரணங்கள் சரித்திரமாவதில்லை

ஒரே ஒரு காரணத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் 5,108 பேர் மரணம் எய்தியிருக்கின்றனர். நெருக்கமான குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறோம் – ஒரே காரணம் கோவிட்-19.

மலேசிய வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் இருந்தது இல்லை. 24 மணி நேரத்தில் 107 பேர் வரை உயிரிழந்திருப்பதைப் பார்த்து நம் மூச்சு நின்றுவிடும்போல் உள்ளது.

மனிதர்கள் கொத்துக் கொத்தாக மரணம் எய்துகொண்டிருக்கின்றனர். இவர்களுள் எத்தனை பேர் கோவிட்-19 தடுப்பூசிக்குக் காத்திருந்தனர், எத்தனை பேர் போட்டுக் கொண்டனர் என்ற தகவல்கள் எதுவும் இல்லை.

சின்னஞ்சிறுசுகள் முதல் முதியோர் வரை மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். குடும்பத் தலைவர்களையும் தலைவிகளையும் இழந்து எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன?

குடும்பத்தின் முழுகெலும்பாக இருந்த இளம் கணவர்களையும் மனைவியரையும் இழந்த குடும்பங்கள் எத்தனை? இதனால் சின்னாபின்னமாகச் சிதறிப்போயிருக்கும் குடும்பங்கள் எத்தனை… எத்தனை!

இவர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போட்டிருந்தால் ஒருவேளை காப்பாற்றியிருக்க முடியுமோ? கேள்விகள் நியாயமானவை. ஆனால், பதிலும் தெளிவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

தங்களின் இந்தப் படுதோல்வியை ஒப்புக்கொள்வதற்கு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது – பிடிவாதமாகவும் இருக்கிறது.

ஒரு நெருக்கடி வரும் போதெல்லாம் கோவிட்-19 தொற்றுப் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன் மாமன்னர் மீண்டும் வலியுறுத்தினார்.

அடுத்த நாள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இது என்ன சாபமா?

தொற்றாலும் மரணங்களாலும் சாமானிய மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கின்ற நிலையில் நாடாளுமன்ற மக்களவை துணை சாபாநாயகர் ஒருவரும் ஓர் அமைச்சரும் அவர்களின் அல்லக் கைகளுடன் டுரியான் விருந்தில் மதிமயங்கிப் போயிருந்தனர்.

மூன்றாம் கட்ட முழு முடக்கம் என்ற பேரில் ஒரு நாடகமே நடந்துகொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளில்தான் அதிகமான தொற்றுப் பாதிப்புகள் என்பது உறுதிப்பட நிரூபணம் ஆகியிருந்தும் அனைத்துலக வாணிபம், தொழில்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தொடர்ந்து மறுதலித்து வருகிறார்.

சிலாங்கூர் மாநிலம் தொற்றுப் பாதிப்பில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட 2,000க்கும் அதிகமானோர் நாளும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 80 விழுக்காட்டுக் கொத்தணிகள் தொழிற்சாலைகளில் இருந்து வருகின்றன என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஓர் அமைச்சரின் தொடர் மறுப்பாலும் பிடிவாதத்தாலும் ஒரு மாநிலமே திண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இதை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

ஜூன் 1ஆம் தேதி 3ஆம் கட்டமாக முழு முடக்கத்தை அரசாங்கம் அறிவித்தது. இதனால் பலன் ஏதும் கிட்டியதா? பாதிப்பும் மரணங்களும் மக்களின் பரிதவிப்புகளும் தான் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனவே தவிர எதுவும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஜூன் 1ஆம் தேதி 100,885 பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 7,105 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது முழு முடக்கக் காலத்தில்தான் நடந்திருக்கிறது. அப்படி என்றால் கோவிட்-19 தோற்கவில்லை. பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம்தான் தோற்றுக் கொண்டிருக்கிறது.

கோவிட்-19 ஒழிப்புத் திட்டக் கொள்கைகளில் அரசாங்கம் முழுமையாகத் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதுதான் நிதர்சனமான உண்மையும்கூட!

எஸ்ஓபி விதிமுறைகள் சாமானிய மக்களுக்கு மட்டும்தான். அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு இல்லை. இறப்பவர்களும் சாமானியர்கள்தானே! அக்கறைதான் வருமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here