13 நாட்கள் துக்கம் அனுசரிப்பு முடிந்தவுடன் அருணகிரி நாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என நித்யானந்தா அறிவித்துள்ளார்.
மதுரை 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் (77) கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.
இந்த நிலையில் முன்பு எப்போதோ ஒரு முறை அருணகிரி நாதரால் நித்தியானந்தா பட்டம் சூட்டப்பட்டார். இந்த நிலையில் அருணகிரி நாதர் இறந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குருமகா சன்னிதானமாக தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா.
கைலாசா நாட்டில் உட்கார்ந்து கொண்டு மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொள்ளும் நித்தியானந்தாவின் அலப்பறை தாங்க முடியவில்லை. ஏற்கெனவே கைலாசா, கரென்சி, பாஸ்போர்ட், கொரோனாவால் தனிமை, கைலாசாவில் தொழில் தொடங்க வாய்ப்பு… அப்படி இப்படின்னு காமெடி செய்தவர் நித்தியானந்தார்.
தற்போது அவர் ஒட்டுமொத்த கைலாசா மக்களுக்கும் (!) அவர் விடுத்திருக்கும் அறிவிப்புகளை பார்க்கலாம். 292 ஆவது ஆதீனம் அருணகிரி நாதரின் மறைவுக்கு ஒட்டுமொத்த கைலாசாவும் இரங்கல் தெரிவிக்கிறது. நாடு தழுவிய துக்கமாக இது அனுசரிக்கப்படும். இந்து நாட்டின் அதிபராக மறைவு செய்திக்கு வருந்துகிறேன்.
2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீன இளவரசராக அருணகிரி நாதர் எனக்கு பட்டம் சூட்டினார்.உலகம் முழுவதும் உள்ள கைலாசாவாசிகள் இதை கடைப்பிடிக்க வேண்டும். கைலாசா தூதரகம் மற்றும் பொது இடங்களில் அருணகிரிநாதருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அடுத்த 13 நாட்களுக்கு அனைத்து கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கொண்டாட்டங்கள் இன்றி பூஜைகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
அதிபரிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும். அருணகிரி நாதர் பெயரில் ஆதிசைவ பல்கலைக்கழகம் திறக்க கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் பல்கலைக்கழகம் கட்டி முடிக்கப்பட வேண்டும். கைலாசாவின் ஆன்மீக முறைப்படி அருணதிரி நாதருக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் , மகேஸ்வர பூஜைகள் நடைபெற வேண்டும்.