MCO அமல்படுத்தப்பட்டதிலிருந்து 9,000 மேலான குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு ; அமைச்சர் ரினா தகவல்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO) முதன்முதலில் மார்ச் 2020 இல் அமல்படுத்தப்பட்டதில் இருந்து மொத்தம் 9,015 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹாருன் இன்று தெரிவித்தார்.

காவல்துறையினரின் தரவுகளை மேற்கோள் காட்டி, 2020 ஆம் ஆண்டு முழுவதும் 5,260 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ரினா தெரிவித்தார். இது 2019 இல் பதிவான 5,657 வழக்குகளுடன் ஒப்பிடும்போது குறைவு என்று கூறினார்.

இருப்பினும் மார்ச் 2020 முதல் கடந்த ஆண்டு இறுதி வரை 4,110 வழக்குகள் பதிவாகி இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என அமைச்சர் ரினா கூறினார்.

“மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையுள்ள காலப்பகுதியில், முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாக 4,905 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன,” என்று அவர் நிசார் ஜகாரியா (BN-Parit) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இத்தரவுகளை தெரிவித்தார்.

குடும்ப வன்முறை முறைப்பாடுகள் அல்லது சம்பவங்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கு அல்லது இந்த விடயங்களுக்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதற்கோ பாதிக்கப்பட்டவர்கள் 15999 என்ற துரித எண்ணிலோ அல்லது 019-2615999 என்ற வாட்ஸ்அப் மூலமாகவோ தாலியன் காசேயை தொடர்பு கொள்ளலாம்.

“இந்த சேவை 24 மணிநேரமும் செயலில் இருக்கும் என்றும் இது அனைத்து தகவல் தொடர்புகளுக்குமான புகார்களை பதிவுசெய்யவும் மற்றும் ஆலோசனை பெறுவதற்கான ஒரு தொடர்பு மையமாக செயல்படுகின்றது.

“மேலும் இது அழைப்பாளர்களை உளவியல் சமூக சேவைகள் உட்பட அமைச்சகம் வழங்கும் எந்த விதமான உதவிகளையும் அணுகவும் அனுமதிக்கிறது” என்று அவர் கூறினார்.

ரினாவின் கூற்றுப்படி, 2020 மார்ச் முதல் டிசம்பர் வரை 2,286 புகார்கள் தாலியன் காசேக்கு கிடைத்தன என்றும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,248 புகார்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here