2021 இல் கோவிட்-19 தொற்றுக்குள்ளான 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகமாகும்; கைரி தகவல்

கோலாலம்பூர் : 2021 இல் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 தொற்றுக்களில், 18 வயதிற்குட்பட்ட தனிநபர்கள் சம்பந்தப்பட்ட 400,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது 2020 இல் சுமார் 12,000 பேராக இருந்தது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இதில் “252,569 பள்ளி மாணவர்கள் மற்றும் 42,831 பாலர்பள்ளி மாணவர்களும் அடங்குவர்” , மேலும் இந்த ஆண்டு 18 வயதுக்குட்பட்டவர்களில் 67 பேர் கோவிட்-19 தொற்று நோயால் இறந்தனர் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

“கோவிட் -19 இலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பு, அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதன் மூலம், உரிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்” என்று அவர் தனது முக்கிய உரையில் (கோவிட் -19 உடன் வாழ்தல்: குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்) என்ற தலைப்பின் கீழ் இன்று (செப்.30) பேசிய போது கூறினார்.

12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக, அரசாங்கம் அந்த பிரிவினருக்கு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதாக கைரி கூறினார்.

CovidNow பற்றிய சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், புதன்கிழமை (செப்.29) நிலவரப்படி 43 விழுக்காட்டினர் அல்லது 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 1,352,870 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.

கோவிட் -19 இன் பாதகமான விளைவுகளிலிருந்து தடுப்பூசி பாதுகாப்பை வழங்கினாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் போதாது, அதற்கு பதிலாக மக்கள் தொற்றுநோய் அபாயத்தை தவிர்க்க புதிய இயல்பான நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கைரி கூறினார்.

முகக்கவசம் அணிவது, சோப் பயன்படுத்தி கைகளைக் கழுவுதல், கை கிருமி சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் ஆகிய “நாம் செய்ய வேண்டிய மற்றும் குழந்தைகள் மத்தியில் நடைமுறையில் இருக்க வேண்டிய விஷயங்களில் எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றார்.

மேலும் அவர்கள் கோவிட் -19 நோயின் அறிகுறி அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளுடன் இருந்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம் ” என்று அவர் கூறினார், இது பள்ளி அமர்வின் தொடக்கத்திற்கான தயார் நடவடிக்கையாக இருக்கும் என்றார்.

அத்தோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதை தவிர, பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்க பெற்றோர்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்க வேண்டும் என்றும் கைரி கூறினார்.

மேலும் “ஆரோக்கியமாக இருப்பது அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பைப் பொறுத்தது என்றும் கோவிட் -19 தொற்று நோயைக் கையாள்வதில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here