தம்போயில் சிவப்பு நிற வெள்ளம்; ஜவுளி தொழிற்சாலையில் இருந்து ஏற்பட்ட சாயக் கசிவே காரணம் என்கிறது சுற்றுச்சூழல் துறை.

ஜோகூர் பாரு: கம்போங் ஸ்ரீ செர்டாங் பாரு, தம்போயில் கடந்த வியாழக்கிழமை (செப். 30) சிவப்பு வெள்ளம் ஏற்பட்டதன் காரணம், அக்கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஜவுளி தொழிற்சாலையில் இருந்து பழைய சாயக் கழிவுகளைக் கொட்டியது தான் என்று சுற்றுச்சூழல் துறை (DOE) தெரிவித்துள்ளது.

அதன் இயக்குநர் ஜெனரல் வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் இச்சம்பவம் பற்றிக் கூறியபோது, இந்த வெள்ளம் அதிக மழை, தொழிற்சாலை கட்டமைப்புகள் மூடப்படாது இருந்தது மற்றும் சிதைந்த சேமிப்பு பைகள் காரணமாக இந்த சாயக்கசிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“எங்கள் விசாரணை மற்றும் குடியிருப்பாளர்களின் தகவலின் அடிப்படையில், சிவப்பு நிற நீர் ஒரு பழைய ஜவுளி தொழிற்சாலையில் இருந்து வந்தது. தொழிற்சாலை உரிமையாளர் அந்த வளாகம் 1940 ஆம் ஆண்டு 8.49 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டதாகவும், கடந்த 2000 ஆம் ஆண்டில் அத்தொழிற்சாலை செயல்பாட்டை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

“மேலதிக விசாரணையில் தொழிற்சாலைப் பகுதியில் பழைய சாயக் கழிவுக் கொள்கலன்களில் இருந்து கசிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

எனினும் வியாழக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளம் குறையத் தொடங்கியபோது, சிவப்பு நிறமும் குறைந்தது என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோகூர் சுற்றுச்சூழல் துறை அந்த தொழிற்சாலை உரிமையாளருக்கு சுற்றுப்புறச் சூழல் தரச் சட்டம் பிரிவு 31 மற்றும் 37 ன் கீழ் உடனடியாக துப்புரவு மற்றும் அகற்றும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது என்றார்.

“அந்த தொழிற்சாலை உடனே துப்புரவுப் பணிகளையும் கசிவை அகற்றுவதையும் மேற்கொண்டது, மேலும் கட்டிடம் வேலை முடியும் வரை அத்தொழிற்சாலை கென்வாசால் (canvas) மூடப்பட்டிருந்தது,” என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 30 அன்று, கிராமவாசிகள் தமது முகநூல் பதிவுகளில் இரத்த சிவப்பு நிறத்தில் உள்ள வெள்ளம் நிரம்பிய பல புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here