பினாங்கில் பதின்ம வயதினருக்கான முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணி ஐந்து நாட்களில் முடிவடையும் ; ஸ்டீவன் சிம் தகவல்

கோப்புப்படம்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 5:

பினாங்கில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதின்ம வயதினருக்கான தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம், சுமார் ஐந்து நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பினாங்கு-புத்ராஜெயா கோவிட் -19 ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் சிம் கூறினார்.

புக்கிட் மெர்தாஜம் எம்.பியுமான  அவர் தொடர்ந்து கூறுகையில், பினாங்கு மாநிலத்தில் உள்ள 130,000 பதின்ம வயதினர்களுக்கு ஐந்து நாட்களுக்குள் தடுப்பூசி போட முடியும் என்று நம்புவதாக கூறினார் .

இவர்கள் இரண்டாவது டோஸை இன்னமும் முடிக்கவில்லை. அதற்குள் கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் (PPV) விரைவில் மூடப்படும் என்ற பேச்சுவார்த்தை குறித்து, சிம் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன் விவாதித்ததாக கூறினார்.

“பினாங்கில் உள்ள அனைத்து பதின்மவயதினரும் தங்களது தடுப்பூசின் இரண்டாவது டோஸை முடிக்கும் வரை PPV திறந்திருக்கும் என்று கைரி எனக்கு அறிவித்தார்,” என்றும் அவர் கூறினார்.

12 வயதுக்கு மேற்பட்ட பதின்மவயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் செப்டம்பர் 23 அன்று பினாங்கில் தொடங்கியது.

மேலும் தடுப்பூசி விகிதத்தின் அடிப்படையில் பினாங்கு மாநிலம் முதல் ஐந்து இடங்களில் இருப்பதாகவும் சிம் கூறினார்.

“நாங்கள் கடந்த மாதம் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியபோது, ​​பினாங்கில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் விகிதம் நாட்டில் மிகக் குறைவாக இருந்தது, முதல் நாளில் நாங்கள் 4,177 இளையோருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டோம்,” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 இளையவர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை மாநில சுகாதாரத் துறை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அக்டோபர் 3 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 1.17 மில்லியன் மக்கள், அல்லது பெரியவர்களில் 85.5 விழுக்காட்டினர் தங்களின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 95.9 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

பினாங்கில் 12 முதல் 17 வயது வரை உள்ளவர் மொத்தம் 89,900 பேரில் 63.5 விழுக்காட்டினர் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 1,534 பேர் அல்லது 1.1 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here