கத்தியால் குத்தப்பட்டு 35 வயது ஆடவர் கொடூரக் கொலை; மூவர் கைது

ஈப்போ, நவம்பர் 5 :

இங்குள்ள தாமான் சிலிபினில் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு 35 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் இதுபற்றிக் கூறுகையில், பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி, பாதிக்கப்பட்டவரின் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.

இவ்வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இங்குள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து நேற்று அதிகாலை 4.15 மணியளவில், அவரது நண்பரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவர் காயங்கள் காரணமாக இறந்துவிட்டார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“சாட்சிகளின் படி, ஈப்போவில் உள்ள தாமான் சிலிபினில் உள்ள ஒரு இடத்தில் இக்கொலை சம்பவம் நடந்திருப்பதாக நம்பப்படுகிறது ,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த வழக்கு கொலை என வகைப்படுத்தப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக யாஹாயா கூறினார்.

இங்குள்ள ஜாலான் கல்கத்தா, பண்டோங், ஈப்போ என்ற முகவரியில் இருக்கும்  எஸ் அல்போன்சஸ் (40) என்ற உள்ளூர் நபரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக, தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக, விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் நார்ஷஹாரா மர்சுகியை 017-4817800 என்ற எண்ணில் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு மையம் (DCC), ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகம் (05-2542222) அல்லது ஈப்போ மாவட்டத்திற்கு kpdipoh@rmp.Gov.My என்ற முகவரியில்மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here