மலேசியர்களை உலுக்கும் ஆன்லைன் மோசடி: 2025 முதல் RM3.8 பில்லியன் பணம் இழப்பு!

கோலாலம்பூர்:

மலேசியாவில் 2025-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி (Online Scam) வழக்குகள் 95,000-ஐத் தாண்டியுள்ளதுடன், இதனால் பொதுமக்கள் இழந்த ஒட்டுமொத்தத் தொகை RM3.80 பில்லியனை எட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பி இன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் RM2.97 பில்லியன் இழப்புடன் 66,204 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் மேலும் 29,434 வழக்குகள் பதிவாகி, RM827.73 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடிகளில் முக்கியமாக தொலைபேசி அழைப்பு மோசடிகள் (Phone Scams), காதல் மோசடிகள் (Love Scams), இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் நிதி குற்றங்கள் மற்றும் இல்லாத கடன் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் என்பன அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்கி அதை மீட்பதில் தேசிய மோசடி எதிர்ப்பு மையம் (NSRC) தீவிரமாகவும் திறம்படவும் செயல்பட்டு வருகிறது.

இதில் 2025-இல் முடக்கப்பட்ட RM17.49 மில்லியனில் 38 சதவீதத் தொகையான RM6.65 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

2026 (ஜனவரி – மே) வரையான காலப்பகுதியில் பணத்தை மீட்கும் வீதம் 49 சதவீதமாக உயர்ந்து, முடக்கப்பட்ட RM7.25 மில்லியனில் RM3.57 மில்லியன் பணம் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி வழங்கும் இந்த மீட்பு விகித உயர்வு, தேசிய மோசடி எதிர்ப்பு மையத்தின் (NSRC) மேம்பட்ட மற்றும் துரிதமானச் செயல்பாட்டைக் காட்டுவதாக அமைச்சர் சைஃபுடின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here