தன் தாயை கத்தியால் வெட்டிக்கொன்ற போதைக்கு அடிமையான ஆடவர், சில நிமிடங்களில் லோரி மோதி மரணம்

குரூண், நவம்பர் 10 :

இன்று காலையில் ஜாலான் குரூண்-ஜென்னியாங் சாலையில், கம்போங் பத்து 5ஐ சேர்ந்த ஒரு போதைப்பித்தர் லோரிக்கு முன்னால் குதித்ததில், லோரி மோதி உயிரிழந்துள்ளார். அவர் தனது வயதான தாயை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்ற சில நிமிடங்களிலேயே லோரியில் மோதி மரணமடைந்தார்.

உயிரிழந்த ஆடவர் போதை மருந்துக்கு அடிமையானதால் நீண்டகாலமாக தாய்-மற்றும் மகன் உறவில் கருத்து வேறுபாடு அல்லது முரண்பாடு இருந்து வந்துள்ளது. மேலும் இருவருக்கும் இடையில் நேற்றிரவு கடுமையான வாக்குவாதம் நடந்ததை தான் கேட்டதாக, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகிலிருக்கும் உறவினர் தெரிவித்தார்.

கோலமூடா போலீஸ் தலைமை துணை ஆணையாளர் அட்சிலி அபு ஷா இதுபற்றிக் கூறியபோது, இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், 31 வயதான போதைப்பித்தர் அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாலைவிபத்தில் கொல்லப்படுவதற்கு முன்னர் தனது தாயைக் கொலை செய்தார்.

“வீட்டிற்குள் கட்டாயப்படுத்தப்பட்ட நுழைவுக்கான எந்த அடையாளமும் இல்லை, மேலும் கொள்ளைச் சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றார்.

மேலும், “70 வயதான கொலைசெய்யப்பட்ட தாயின் கை மற்றும் காது மீது சுய பாதுகாப்பு காயங்களைக் கண்டுபிடித்ததன் அடிப்படையில், அந்த ஆடவர் தனது தாயை சரமாரியாக கத்தியால் வெட்டினார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்தோடு உறவினர்களின் கூற்றுப்படி, போதைப் பழக்கம் தவிர, அந்த ஆடவர் மனநலத்திற்கான மருந்துகளை எடுத்து இருந்தார் என்றும் அட்சிலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here