கிளந்தானில் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபர் மரணம்!

கோத்தா பாரு, நவம்பர் 20 :

கடந்த செவ்வாய்க்கிழமை ஜாலான் பயாமில் உள்ள கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 23 வயது கார் திருட்டு சந்தேக நபர் இறந்துவிட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஷாஃபின் மாமட் கூறுகையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றார்.

“கார் திருட்டு வழக்குக்காக, அந்த நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

“நவம்பர் 16 ஆம் தேதி நண்பகல் 2.30 மணியளவில் அவரது வாக்குமூலம் போலீஸாரால் பதிவுசெய்யப்பட்டபோது, ​​அவர் வாயில் நுரை வர ஆரம்பித்தது, உடனடியாக அவர் ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்” என்று ஷஃபின் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“நோயியல் துறையின் பகுப்பாய்வு மற்றும் ஆய்வக அறிக்கைகளைப் பெற்ற பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

“இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்பதை காவல்துறை இங்கு வலியுறுத்த விரும்புகிறது.

மருத்துவமனையின் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் ஆய்வக சோதனைகள் விசாரணைகளுக்கு உதவும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சம்பவத்தை ஊகிக்கவோ அல்லது சம்பவம் பற்றிய அனுமானங்களைச் செய்யவோ வேண்டாம் என்று பொதுமக்களை ஷஃபின் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here