அமெரிக்க வெளியுறவு செயலாளர் மலேசியா வருகை

புத்ராஜெயா, டிசம்பர் 9 :

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் டிசம்பர் 14 முதல் 15 வரை மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செயலாளர் பிளிங்கன் தனது தொடக்க பயணமாக இங்கு வருவதை, வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா வரவேற்பதாக, மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) புதன்கிழமை வெளியிடட ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை சந்திக்க உள்ளார்.

இந்தச் சந்திப்பில் பொதுவான சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்மா புத்ராவின் கூற்றுப்படி, இந்த விஜயம் மலேசியா மற்றும் அமெரிக்காவிற்கு பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் புதிய கூட்டு முயற்சிகளை ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.

அமெரிக்க-மலேசியா இடையேயான கூட்டாண்மையானது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரம், இணையப் பாதுகாப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற துறைகளில் தொடர்ந்து செயல்படும் ஒத்துழைப்பு இரு தரப்புக்கும் மிகப்பெரிய நன்மைகளைத் தந்துள்ளது.

அமெரிக்கா மலேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகள் மற்றும் முதலீட்டாளர்களில் ஒன்றாகும்.

2020 ஆம் ஆண்டில், மலேசியா-அமெரிக்க வர்த்தகம் RM178.18 பில்லியனாக இருந்தது, அதே சமயம் மலேசியாவில் உற்பத்தித் துறையில் அமெரிக்காவிடமிருந்து அனுமதிக்கப்பட்ட மொத்த முதலீடுகளின் மதிப்பு RM3.7 பில்லியன் ஆகும்.

இதற்கிடையில், கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடக அறிக்கையில், அமெரிக்க செயலாளர் பிளிங்கனின் மலேசியா பயணம், டிசம்பர் 13-16 வரையிலான தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான அவரது பயணத்தின் ஒரு பகுதியாகும் என்றும் இதில் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தும் அடங்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here