கோத்தா கினாபாலு, டிசம்பர் 10 :
காகிதத் தட்டுப்பாடு காரணமாக பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சபாவில் உள்ள தேசியப் பதிவுத் துறை (என்ஆர்டி) மன்னிப்புக் கோரியுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
“இருப்பினும், காகித கையிருப்பு பற்றாக்குறைப் பிரச்சினை அக்டோபர் தொடக்கத்தில் நடந்தது, சமூக ஊடகங்களில் கூறப்பட்டபடி 10 மாதங்களுக்கு முன்பு அல்ல.
“மேலும் இந்தப் பிரச்சினை சரவாக் தேசியப் பதிவுத் துறை அலுவலகத்தையும் பாதிக்கிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றுவரை, சுமார் 3,200 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
பிறப்புச் சான்றிதழுக்காகப் பயன்படுத்தப்படும் காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், நாட்டில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளம் இந்தத் தாமதத்திற்கு வழிவகுத்ததாகவும் கைருல் அமினஸ் கூறினார்.
மேலும் நிலுவையிலுள்ள பிறப்புச் சான்றிதழ்கள் அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும் என்று கைருல் உறுதியளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மற்றும் பிறப்புச் சான்றிதழுக்கான சரிபார்ப்புக் கடிதங்கள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் NRD அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.