கோலாலம்பூர், டிசம்பர் 13:
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று முன்னதாகக் கூறப்பட்ட போதிலும் அது நீட்டிக்கப்படாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.
அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடையும் என்று அவர் கூறினார்.
பெரும்பாலான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறைக்கான திட்டங்களை ஏற்கனவே தயாரித்துவிட்டதால், அமர்வை நீட்டிக்காமல் இருப்பது நல்லது என்று தாம் மிகவும் பரிசீலித்த பிறகே இதனை தெரிவித்தார் .
“இருப்பினும், நம்மில் பலர் ஏற்கனவே விடுமுறை மனநிலையில் இருப்பதை நான் புரிந்து கொண்டாலும், பல முக்கியமான மசோதாக்களுக்கு வாக்களிப்பதால், அமர்வில் கலந்துகொள்ள எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறேன்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒன்பது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வான் ஜுனைடி கூறினார்.
நாடாளுமன்ற சீர்திருத்த மசோதாக்களில் ஒன்று, அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும்நாடாளுமன்ற சபாநாயகர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
-பெர்னாமா
























