தாமான் ஸ்ரீ மூடாவில் சுகாதார அமைச்சகத்தின் கள செயல்பாட்டு மையம் திறப்பு

ஷா ஆலம், டிசம்பர் 22 :

கடந்த திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் மற்றும் அவசரகால நிபுணர்களுடன் கூடிய தாமான் ஸ்ரீ மூடா, பிரிவு 25 இல் உள்ள சுகாதார அமைச்சகத்தின் (MOH) கள செயல்பாட்டு மையத்தில், ஒரு நாளைக்கு 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு வருகை புரிந்த சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவர்களால் முன்மொழியப்பட்டபடி, இந்த செயல்பாட்டு மையம் முதலில் திறக்கப்பட்டது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“இந்த செயல்பாட்டு மையம் களத்தில் ஒரு சிறிய அவசர அறை போல செயல்படுகிறது. சிறந்த சேவையை வழங்குவது மிக முக்கியமானது, ”என்று அவர் இன்று தாமான் ஸ்ரீ மூடாவுக்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இம்மையம் லேசான அறிகுறிகள் உள்ள நோய்களுக்கு சிகிச்சையளிப்பதாகவும், மருந்து தீர்ந்து போன குடியிருப்பாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

“தீவிர சிகிச்சை அல்லது ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மற்றும் கடுமையான நோயுள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள், ஆனால் நாங்கள் முதலில் இங்கே (மையத்தில்) ஆரம்ப சிகிச்சையை வழங்குவோம்,” என்று அவர் கூறினார்,மேலும் அப்பகுதியில் உள்ள வெள்ள நிவாரண மையங்கள் மூடப்படும் வரை, மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் கூறினார்.

சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேலும் மூன்று கள செயல்பாட்டு மையங்கள் திறக்கப்படும் என்றார்.

அதுமட்டுமின்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுடன் MOH இணைந்து செயல்படும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“எலியின் சிறுநீர், வயிற்றுப்போக்கு மற்றும் உணவு விஷம் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், வெள்ளத்திற்குப் பிறகு ஏற்படும் தொற்றை எண்ணி நாம் கவலைப்படுகிறோம் ” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூய்மையை பராமரிக்கவும், கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க, நிலையான இயக்க நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here