ரோஹிங்கியா சிறுவர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை அடையாளம் காண முயற்சித்து வருவதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் சைபுல் அன்னுார் யூசோப் தெரிவித்தார்.
அந்த வீடியோவில் ரோஹிங்கியா குழந்தைகள் காரில் இருந்து காருக்குச் சென்று டிரைவர்களிடம் ஆக்ரோஷமான முறையில் பணம் கேட்பதைக் காட்டியது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் நடந்ததாக சைபுல் நம்பினார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் சட்டம் 2001, தண்டனைச் சட்டம் மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 (திருத்தப்பட்ட 1987) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 32ன் கீழ், குழந்தைக்கு உடல் அல்லது உணர்ச்சிக் காயத்தை ஏற்படுத்தும் வகையில், தங்கள் பராமரிப்பில் உள்ள எந்தவொரு குழந்தையை துஷ்பிரயோகம் செய்தல், பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், புறக்கணித்தல், கைவிடுதல் அல்லது அம்பலப்படுத்துதல் போன்றவற்றில் குற்றவாளிகள் யார் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு RM50,000 வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தண்டனைச் சட்டத்தின் 283வது பிரிவின் கீழ், ஒரு பொதுச் சாலையில் ஆபத்து அல்லது இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக ஒரு தனிநபருக்கு RM400 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் பிரிவு 27 (c) இன் கீழ், பொது இடத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு RM100 வரை அபராதம் அல்லது ஒரு மாதம் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த ரோஹிங்கியா குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தை அழைக்குமாறு சைபுல் பொதுமக்களை வலியுறுத்தினார்.