பாக்டீரியா கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான இரு பால்மா தயாரிப்புக்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23:

அமெரிக்காவைச் சேர்ந்த அபோட் நியூட்ரிஷனின் ஸ்டர்கிஸ் (Abbott Nutrition’s Sturgis) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஃபார்முலா பால்மா தயாரிப்புகளில் ஒருவகையான பாக்டீரியா கண்டறியப்பட்டதை அடுத்து, அபோட் லேபரட்டரீஸ் (M) செண்ரியன் பேர்ஹாட்டின் இரண்டு குழந்தை ஃபார்முலா தயாரிப்புகளான அலிமென்டம் (Alimentum) மற்றும் ஹியூமன் மில்க் ஃபோர்டிஃபையர்களை (Human Milk Fortifier) சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சகம் நிறுவனம் தானாக முன்வந்து இந்த இரண்டு பேபி ஃபார்முலா தயாரிப்புகளையும் அதன் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தயாரிப்புகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க அமைச்சகம் “தானாகவே நிராகரிப்பு” செய்யும் உத்தரவை பிறப்பித்ததை அடுத்து, இப்பால்மா தயாரிப்புக்கள் திரும்பப் பெறப்பட்டது என்று அது மேலும் கூறியது.

ஸ்டர்கிஸ் தயாரித்த குழந்தைகளுக்கான ஃபார்முலா தயாரிப்புகளில் ‘க்ரோனோபாக்டர் சகாசாகி’ மற்றும் ‘சால்மோனெல்லா நியூபோர்ட்’ பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெளியிட்ட அறிக்கையினை தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் இதனை மிகக்கவனத்தில் எடுத்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, “இந்த பாக்டீரியா மூளைக்காய்ச்சல் அல்லது செப்சிஸை ஏற்படுத்தக்கூடியது, இருப்பினும் இதுபோன்ற நோய்கள் ஏற்படுவது அரிதானவை.

“இது குழந்தைகளுக்கு பசியின்மை, காய்ச்சல் மற்றும் சோம்பல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும்” என்று அமைச்சகம் கூறியது.

அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பார்கோடில் “22” என்ற இலக்கத்தில் தொடங்கி “37” வரையிலான தொகுதி எண்ணுடன் இரண்டு பேபி ஃபார்முலா தயாரிப்புகளை அடையாளம் கண்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தயாரிப்புகள் இந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் காலாவதியாகும்.

“இந்தப் பால்மாவு தயாரிப்புகளை இன்னும் ஆன்லைனில் வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து சில்லறை விற்பனையாளர்களும் அவற்றை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு அருகிலுள்ள மாவட்ட சுகாதாரத் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று அமைச்சகம் கூறியது.

“பெற்றோர்களும் பாதுகாவலர்களும் குழந்தைகளுக்கான பால்மாவு தயாரிப்புகளில் அதன் தொகுதிக் குறியீட்டைக் கண்டறியவும், மேலிம் இந்த ஃபார்முலாக்களை வாங்குவதை நிறுத்தவும், தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“மெலும் இந்த வகைப்பால்மாவு தயாரிப்புகளை குடித்த பிறகு அவர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும்” என்றும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here