கோலாலம்பூர், மார்ச் 23 :
பினாங்கில் உள்ள செபராங் பிறை செலாத்தான் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தின் (IPD) தடுப்புக்காவலில் கைதியாக (OKT) இருந்த உள்ளூர் நபர் இன்று உயிரிழந்தார்.
நேர்மை மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறையின் (JIPS) துணை இயக்குநர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் இதுபற்றிக் கூறுகையில், காலை 7.30 மணிக்கு தனது துறைக்கு இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கை கிடைத்தது என்றார்.
“59 வயதான அந்த நபர் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 12 (3) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15 (1) (ஏ) ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
“மரணமான கைதி நேற்று கைது செய்யப்பட்டார், இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
JIPS குற்றப் புலனாய்வு மற்றும் தடுப்புக்காவலில் உள்ள இறப்பு பிரிவு (USJKT) இந்த வழக்கை விசாரணை செய்யும் என்றார்.