சரடோக், மார்ச் 26 :
இங்குள்ள உலு அவேக்கில் உள்ள ஜோசுவா மிடாஸ் நீண்ட வீட்டுக் குடியிருப்பு இன்று தீயில் எரிந்து நாசமானதால், 11 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தன.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தீ விபத்து குறித்து தங்களுக்கு காலை 10.25 மணியளவில் அழைப்பு வந்ததாகவும், சரடோக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) 11 உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வந்தபோது, இரண்டு மாடிகள் கொண்ட நீண்ட குடியிருப்பில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
“குழு தீயணைப்பு இயந்திரங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு நீர் குழாய்களைப் பயன்படுத்தி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. தீயை கட்டுப்படுத்தி அணைக்க கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆனது, இப்போதும் தீ மீண்டும் ஏற்படாமல் இருக்க ‘மேம்படுத்தும்’ பணி நடந்து வருகிறது.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு, மற்றய பகுதிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது,” என்றார்.
இதில் மொத்தம் ஒன்பது வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், மற்ற இரண்டு வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.