2022 சிலாங்கூர் அனைத்துலக உச்சநிலை மாநாடு – 350 மில்லியன் ரிங்கிட் வருமானத்திற்கு இலக்கு

2022 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் Selangor International Business Summit (SIBS) 2022 அனைத்து இனத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி ஹாஜி இட்ரிஸ் தெரிவித்தார்.


நாட்டில் செயல்படும் அனைத்து இனங்களின் வர்த்தகச் சபைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ஆர்வமுள்ள அனைவரும் இந்த வர்த்தக வாய்ப்பு, அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றார்.
வரும் 2022 அக்டோபர் 6 முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (கேஎல்சிசி) இந்த உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.
இந்த நான்கு நாள் நிகழ்ச்சிக்கு கேஎல்சிசி-யில் உள்ள அனைத்து எட்டுக் கண்காட்சி மண்டபங்களும் இரண்டு மாநாட்டு மையங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்சம் 850 முகப்பிடங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 350 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டுவதற்கு இலக்கு வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த டத்தோ ஹசான், 30 ஆயிரம் வணிக வருகையாளர்கள் நேரில் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


2021இல் நடைபெற்ற சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு முதன் முறையாக மெய்நிகர் வழி நடத்தப்பட்டது. கண்காட்சியும் மாநாடுகளும் கேஎல்சிசி-யில் நேர்முகமாக நடத்தப்பட்ட நிலையில் வணிக வர்த்தக வாய்ப்புகள் குறித்த விளக்கங்கள் மெய்நிகர் வழி நடத்தப்பட்டன என்று அவர் சொன்னார்.
SIBS2021 மாநாட்டில் 497 கண்காட்சி முகப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் 623 கண்காட்சி முகப்பிடங்கள் மெய்நிகர் வழி நடத்தப்பட்டன. நான்கு நாடுகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் அதில் பங்கேற்றன.
இந்தக் கண்காட்சி வழி 217.6 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டது. இந்த நான்கு நாள் மாநாட்டில் 25,410 பேர் நேரடியாக வருகை தந்தனர். இவர்களுள் தொழில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வணிகத்துறை விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


SIBS2022 மாநாட்டில் பிரதான அம்சமாக உணவு – பானங்கள் (F&B) தொடர்புடைய வணிகங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு அதன் அறிமுகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று டத்தோ ஹசான் சொன்னார்.
இது தவிர்த்து ஆறு பிரதான நிகழ்ச்சிகளும் இந்த உச்சநிலை மாநாட்டில் நடத்தப்படும். 8ஆவது சிலாங்கூர் அனைத்துலகக் கண்காட்சி (F&B), 8ஆவது சிலாங்கூர் அனைத்துலகக் கண்காட்சி (மருத்துவம்), 2ஆவது சிலாங்கூர் தொழில் பூங்கா கண்காட்சி, 6ஆவது சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு, 7ஆவது சிலாங்கூர் விவேக மாநகர் – டிஜிட்டல் பொருளாதார மாநாடு, 3ஆவது சிலாங்கூர் ஆய்வு – மேம்பாடு, புத்தாக்கக் கண்காட்சி ஆகியவை இதில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இம்முறை பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, கிளாந்தான், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் பெரும்பாலான முகப்பிடங்களை எடுத்துக் கொண்டிருப்பது இந்த உச்சநிலை மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது.


அதே சமயம் பிலிப்பைன்ஸ், இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்கின்றனர். அடுத்த சில மாதங்களில் மேலும் சில நாடுகள் இதில் பங்கேற்கக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என்று டத்தோ ஹசான் தெரிவித்தார்.
முன்னதாக சிலாங்கூர் மாநில தொழில்துறை, வர்த்தகத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் SIBS2022 உச்சநிலை மாநாட்டின் அறிமுக நிகழ்ச்சியை கோலாலம்பூர் சௌஜானா ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.நாட்டில் பொருளாதார வளமிக்க ஒரு மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் SIBS2022 மாபெரும் பங்களிப்பை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here