ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு- கேன்பெர்ரா விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது

கேன்பெர்ரா, ஆகஸ்ட் 14 :

ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா விமான நிலைய முனையத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, மத்திய போலீஸ் படை அதிரடியாக செயல்பட்டு விமான நிலையத்தில் இருந்த பயணிகளை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 5 ரவுண்டுகள் வரை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் பாதுகாப்பு பணியில் இறக்கி விடப்பட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் கேன்பெர்ரா விமான நிலையத்தில் உள்ள சுவர்களில் குண்டுகள் துளைத்துள்ளன. ஜன்னல் கண்ணாடிகளிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுபற்றி ஆலிசன் என்ற பெண் பயணி அதிர்ச்சியுடன் கூறும்போது, பாதுகாப்பு சோதனையில் எங்களுடைய பைகளை நாங்கள் தந்தபோது, இந்த சம்பவம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், நான் திரும்பி பார்த்தேன். நபர் ஒருவர் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன், காரில் இருந்து பயணிகளை இறக்கி விடும் பகுதியை நோக்கி நின்றபடி காணப்பட்டார். சிலர் கூச்சலிட்டனர். கீழே படுத்து கொள்ளும்படி கூறினர். நாங்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடினோம் என அவர் கூறியுள்ளார்.

நிலைமை தற்போது, கட்டுக்குள் உள்ளது என ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் படை தெரிவித்து உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள ஒருவரை போலீசார் பிடித்து சென்றனர். அவரிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் கிடைத்த தகவலின்படி, துப்பாக்கி சூட்டில் ஒரே நபர் அவர் என தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என மக்களிடம் போலீசார் கேட்டு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here