டோக்கியோ: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குக்கு செலவிட்டதை விட, ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே இறுதிச்சடங்குக்கு அதிக தொகை செலவிடப்பட உள்ளது. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஷின்சோ அபே. கடந்த 2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரையும் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரையும் அந்த நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே பதவி வகித்தார். உடல் நல பிரச்சினைகளில் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்த ஷின்சோ அபே, கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
ஷின்சோ அபே
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் ஷின்சோ அபே உயிரிழந்தார். ஜப்பானின் முக்கிய தலைவராக இருந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள்
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு அடுத்த வாரம் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார். இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஜப்பான் அரசு ஒருபக்கம் செய்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. குறிப்பாக ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கிற்காக செலவிடப்படும் தொகைதான் அந்ந நாட்டில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி
ஷின்சோ அபே இறுதிச்சடங்கிற்காக 1.66 பில்லியன் யென் தொகையை செலவிட ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு செலவு செய்த தொகையை விட இது அதிகம் என்று சொல்லப்படுகிறது.
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு இங்கிலாந்து அரசு செலவிட்ட தொகை 1.3 பில்லியன் யென் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக 13 பில்லியன் டாலரை ஜப்பான் செலவிட்டது அந்த நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருமடங்கு அதிகம் செலவு
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட இருமடங்கு அதிகம் செலவானதால் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு தொகை செலவிட வேண்டுமா? என பரவலாக கேள்விகள் எழுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இறுதிச்சடங்கிற்காக 250 மில்லியன் யென் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக 800 மில்லியன் யென், வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்று உபசரிக்க 600 மில்லியன் யென் தொகையும் மதிப்பிட்டு ஜப்பான் அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச்சடங்கிற்கான தொகை 1.7 பில்லியன் யென் வரை செலவு ஆகலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.