இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு பின்பு பிரதமராக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
எனினும், மந்திரியான பின்னர் அவர் அளித்த பேட்டி இந்தியா உள்பட சர்வதேச அரங்கில் புயலை கிளப்பியது. அவர் அளித்த பேட்டியில், விசா காலக்கெடு முடிந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என கூறினார். இங்கிலாந்து மக்கள் ஒன்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை என அவர் கூறினார்.
இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் எதிர்வினையாற்றியது. இந்நிலையில், பிரேவர்மேன் இந்தியாவுக்கு ஆதரவாக பேசினார். எனினும், அவர் ஒரு சில நாட்களில் மந்திரி பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து லிஸ் டிரஸ்சும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இளம் பிரதமரானவர் என்ற பெருமையை சுனக் பெற்றுள்ளார். ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியான சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். பதவி விலகிய 6 நாட்களுக்குள் பிரேவர்மென் மீண்டும் மந்திரியாகி உள்ளார்.
டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பிரேவர்மென் நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறி கடந்த 18-ந்தேதி மந்திரி பதவியில் இருந்து விலகினார்
எனினும் பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் அப்போது கூறினார். இந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. வெட் கூப்பர் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களின் முக்கிய பொறுப்புக்கு பிரேவர்மென்னை மீண்டும் நியமனம் செய்ததற்காக சுனக்கை கடுமையாக சாடியுள்ளார்.
இதுபற்றி ஸ்கை நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிற பாதுகாப்பு விதிமீறல்களிலும் பிரேவர்மென் ஈடுபட கூடிய சாத்தியங்கள் உள்ளன. பாதுகாப்பு விசயங்களில் விதிகளை மீறும் வகையில் நடந்து கொண்ட ஒருவரை 6 நாட்களில் மீண்டும் மந்திரி பதவியில் நியமனம் செய்து இருப்பது ரிஷி சுனக்கின் மிக பெரிய தவறை உண்மையில் எடுத்து காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். சுவெல்லா பிரேவர்மென் நியமனம் ஒரு பொறுப்பற்ற, தவறான முடிவு என ரிஷி சுனக்கை எதிர்க்கட்சி எம்.பி. சாடியுள்ளார்