பினாங்கு புக்கிட் குளுகோர் பி051 நாடாளுமன்றத் தொகுதிக்கு இளம் தொழில் அதிபர் களம் காண்கிறார்; பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி வாய்ப்பு பிரகாசம் – ப.தினகரநாபன் நம்பிக்கை

செ.குணாளன், பண்டார் பாரு, ஆயர் ஈத்தாம், நவ. 16-

பினாங்கு மாநிலத்தில் பரபரப்பான தொகுதி என்று கூறப்படும் பி051 புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதிக்கு டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (PERIKATAN NASIONAL) வேட்பாளராக தினகரநாபன் த/பெ பத்மநாபன் ( வயது 41 ) களம் காண்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பினாங்கில் தனது தொழில் தடத்தைப் பதித்து வரும் ப.தினகரநாபன் பினாங்கு மக்களுக்கும் தாம் களம் காணும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் தன் முழு நேரச் சேவையைச் செய்வதற்கு இந்த அரசியல் பயணத்தில் இறங்கி இருப்பதாக மக்கள் ஓசைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டார்.

நாட்டில் புதிதாக அறிமுகமாகியுள்ள 18 வயது வாக்காளர்கள், தாம் களம் காணும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள், வேலை வாய்ப்பு, மலிவு விலை வீடுகள், அரசாங்க வேலை வாய்ப்பு, வாகன நெரிசல் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை மேம்பாடு, அனைத்து வகைப் பொருட்களும் உணவுப் பண்டங்களும் கிடைக்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய பேரங்காடி, இணையதள வசதி, பொதுப் போக்குவரத்து, மருத்துவ வசதி, மருத்துவ அவசரச் சிகிச்சை வாகனம், ஏழை எளியவர்களுக்கான உதவி என்று வசதிகளை உருவாக்க தான் திட்டம் கொண்டுள்ளதாக தினகரநாபன் கூறினார். அதே வேளையில் மேலும் பல்வேறு பிரச்சினைகள் இந்தத் தொகுதியில் இருப்பதால் அவற்றை எல்லாம் களையத் தாம் மக்கள் சேவையாற்ற இங்குப் போட்டி இடுகிறேன் என்று அவர் விவரித்தார்.

தன்னுடைய இந்த அரசியல் பிரவேசத்தில் தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான பெர்செகுத்துவின் கீழ் பினாங்கு மாநிலத்தில் ஒரே இந்திய வேட்பாளரான எனக்கு இந்தப் புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கு என்னை ஒரு வேட்பாளராக அறிமுகப்படுத்திய எங்கள் தேசியத் தலைவர் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று தினகரநாபம் கூறினார்.

இந்தத் தொகுதியில் கடந்த பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருபவர்கள், முழுமையான சேவையை ஆற்றி இருக்கிறார்களா என்றால் அது உண்மையில் கேள்வி குறிதான். காரணம் நான் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம் மூவின மக்களும் என்னிடம் இங்குள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொல்கிறார்கள் என்று அவர் கூறினார்.

டான்ஸ்ரீ முஹிடினைப் பொறுத்த வரையில், அவர் பிரதமராக இருந்த காலத்தில் கடுமையான கோவிட்-19 காலகட்டம், அந்தக் காலகட்டத்தில் நாட்டை மிகவும் திறம்பட வழி நடத்தியதால் இன்றும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. அந்த வகையில் அவர் மீண்டும் இந்தத் தேசியக் கூட்டணி சார்பில் வெற்றி பெற்று பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், நான் இங்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் மக்களின் தேவைகள் மிக மிகச் சுலபமாக நிறைவேறும் என்று ப.தினகரநாபன் கூறினார்.

இந்த ஆண்டு 18 வயது வாக்காளர்கள் தங்களின் வாக்கை அளிக்கும் வாய்ப்பு உள்ளதால் இளைய தலைமுறையினருக்கும் அதிக திட்டங்கள் வைத்துள்ளதாக அவர் கூறினார். அதில் ஒரு முக்கியத் திட்டமாக இந்தப் புக்கிட் குளுகோர் தொகுதியில் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் உருவாக்கத் திட்டம் கொண்டுள்ளேன். அதில் மூன்று இன இளைஞர்களையும் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் உடல் கட்டழகு இளைஞர்களாகவும் உருவாக்கத் திட்டம் கொண்டுள்ளேன் என்று அவர் தினகரநாபன் கூறினார்.

பினாங்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் ஓர் இளைஞரான நான் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டது வெறும் அரசியல் மட்டுமல்ல, உண்மையில் இங்குள்ள மக்களுக்கு என்னால் என்ன சேவையை வழங்க முடியும் என்ற நோக்கம் மட்டுமே. நான் ஒரு தொழில் முனைவோராக இருக்கிறேன், இருந்தாலும் நம் நாட்டின் மீதும் மக்களின் மீதும் நான் கொண்டுள்ள நேசத்தின் காரணதால் சமூக உணர்வு கொண்ட நான் என் மக்களுக்குச் சேவையாற்றவே விரும்புகிறேன்.

இந்தத் தொகுதியில் நான் வெற்றி பெறும் பட்சத்தில் 8க்கும் மேற்பட்ட திடங்களை நான் கொண்டுள்ளேன். அரசியலில் வெறும் சட்டை போடுவதும் விவாதம் பண்ணுவதும் மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்கள் சேவையையே முதன்மையாகக் கொண்டு சேவையாற்றுவேன் என்று தினகரநாபன் பத்மநாபன் உறுதியாகக் கூறினார். எனவே வரும் 19ஆம் நாள் காலையிலேயே குடும்பம் குடும்பமாகச் சென்று எனக்கு வாக்களியுங்கள். ஓட்டு அட்டையில் என் பெயர் முதலில் இருக்கும் என்னுடைய எண் 1. எனவே எனக்கான ஓட்டு உங்கள் கையில், உங்களுக்கான சேவை என் கையில் உள்ளது. மாற்றத்தைக் கொண்டு வந்து வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று புக்கிட் குளுகோர் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தினகரநாபன் கேட்டுக்கொண்டார்.

இங்கே பிறந்து இங்கே வளர்ந்து இங்கே நம் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள நாம், நம் வாக்கு உரிமையை இழந்துவிடாமல் நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அனைவரும் வாக்களிக்க முன்வந்தால் நாட்டின் 10ஆவது பிரதமராக டானஸ்ரீ முஹிடின் யாசின் நிச்சயம் பதவி ஏற்பார். நான் நிச்சயம் வெற்றி பெற்று உங்களின் முழுநேரச் சேவகனாக வருவேன் என்று மேலும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here