புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ந்தேதி முதல் அமலாகிறது: எலான் மஸ்க் அறிவிப்பு

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார்.  டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும்  19.99 அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவிலேயே பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். டுவிட்டர் நிறுவனமே தங்களுக்கு கட்டணம் தரவேண்டும் என்றும் கூறினர்.

இந்நிலையில் வர்த்தக யுக்தியாக, டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய  உள்ளது என்று எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த நிலையில் புளூ டிக் கட்டண சேவை கடந்த வாரம் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. அடுத்த வார இறுதிக்குள் இந்த சேவையை மீண்டும் கொண்டு வருவேன் என எலான் மஸ்க் கூறினார்.

டுவிட்டர் புளூ டிக் சேவையை  யாராவது  தவறாக பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் கட்டண தொகையை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலான் மஸ்க் கூறினார். யாரேனும் தங்களது டுவிட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்ற முற்பட்டால், அது புளூ டிக் குறியீடு இழப்புக்கு வழிவகுக்கும். அந்த பெயரை டுவிட்டர் நிறுவனம் உறுதி செய்யும் வரை திரும்ப  பெற முடியாமல் போகும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை வருகிற 29-ந்தேதி மீண்டும் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here