கோலாலம்பூர், நவம்பர் 21 :
புதிய அரசாங்கம் அமைப்பதற்கு கூட்டணி சேருவது தொடர்பில் தேசிய முன்னணியின் உச்ச மன்றம் எடுக்கும் முடிவை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தேசிய முன்னணி கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை (நவம்பர் 21) மற்றய 26 தேசிய முன்னணி எம்.பி.க்களுடன் ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜாஹிட் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தேசிய முன்னணி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப் பிரமாண பிரகடனத்தில் முன்னர் இட்டிருந்த கையொப்பம் செல்லாது என்றும் ஜாஹிட் கூறினார்.
அத்தோடு புதிய அரசாங்கம் அமைப்பதற்கு பொருத்தமான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் ஜெலேபு மற்றும் கோலப் பிலா எம்.பி.க்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் ஜாஹிட் கூறினார்.
இருப்பினும், செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைனை அக்குழுவில் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















