தினசரி கோவிட் பாதிப்பு அறிக்கை வெளியீட்டை நிறுத்த சீன அரசு முடிவு

  1. சீனாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த விவரம் வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை.  சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாடு திணறி வருகிறது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. டிச.,1 முதல் 19 வரை மட்டும் 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டில் இருந்து கசிந்த அரசின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பானது ‘ஜீரோ கோவிட்’ என்ற கொள்கையை சீன அரசு தளர்த்திய பிறகு ஏற்பட்டதாக தெரிகிறது. அடுத்தாண்டில் மட்டும் 10 முதல் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவின் இந்த நிலைமை உலக நாடுகளை மிகவும் கவலைக்குரியதாக்கி உள்ளது.

இந்நிலையில், சீனாவில் தினசரி கோவிட் தொற்று குறித்த விவரங்களை வெளியிடுவதை நிறுத்த சீன தேசிய சுகாதார ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் ஆராய்ச்சிக்காக மட்டும் கோவிட் குறித்த தகவல்களை சீனாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here